Last Updated : 11 Jul, 2018 01:13 PM

 

Published : 11 Jul 2018 01:13 PM
Last Updated : 11 Jul 2018 01:13 PM

உடைந்த பாலத்தின் வழியே உயிரை கையில் பிடித்துச்செல்லும் பள்ளிக்குழந்தைகள்

இரண்டு கிராமங்களை இணைக்கும் பாலம் இடிந்துபோன நிலையில் கிராமத்து மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உடைந்த பாலத்தின் வழியே செல்லும் அவலம் குஜராத் மாநிலத்தில் கேடா நகரம் அருகே தொடர்கின்றது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இப்பாலம் இடிந்தது. ஆனால் உள்ளூர் நிர்வாகமோ மாவட்ட நிர்வாகமோ அவர்களுக்கு உடனடியாக மாற்றுவழியை ஏற்படுத்தித் தராத நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிராமத்து மக்கள் ஒவ்வொரு நாளும் கடந்துசெல்வதைவிட குழந்தைகளும் கூட இடிந்த பாலத்தின்  வழியே அதன் விளிம்புளைப் பற்றிக்கொண்டு பாலத்தைக் கடந்து ஆபத்தான நிலையில் பள்ளி சென்று வருவது மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

நாய்க்கா மற்றும் பெராய் கிராமங்களை இணைக்க ஒரு பாலம் கட்டித்தர வேண்டுமென அதிகாரிகளிடம் உள்ளூர் மக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் தற்காலிகமாகவேணும் எந்த நடவடிக்கையும் இன்னும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்று அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

உள்ளூர் வாசி ஒருவர் ஏஎன்ஐயிடம் தங்கள் அவலத்தை எடுத்துக் கூறுகையில்,‘‘இந்த இடிந்த பாலத்தையும் நாங்கள் பயன்படுத்த வில்லையென்றால், ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய ஊருக்கு 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கும். அதனால்தான் மிகவும் ஆபத்தான நிலையிலும் வேறுவழியின்றி இந்தப் பாலத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்’’ என்றார்.

இதுகுறித்து கேடா மாவட்ட ஆட்சியர் ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில் ‘‘இரண்டு கிராமங்களையும் இணைக்கும் பாலம் கட்டுமான வேலை உடனடியாக ஆரம்பிக்கப்படும். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாலத்தின் வேலையை இன்னும் தொடங்கமுடியாத நிலை உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x