‘நியாயமாக, பாரபட்சமின்றி செயல்படுங்கள்’ - சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மேற்கோள் காட்டி சிபிஆருக்கு காங். வாழ்த்து

‘நியாயமாக, பாரபட்சமின்றி செயல்படுங்கள்’ - சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மேற்கோள் காட்டி சிபிஆருக்கு காங். வாழ்த்து
Updated on
1 min read

புதுடெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போல நியாயமாக, பாரபட்சமின்றி சி.பி. ராதாகிருஷ்ணன் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அதேவேளையில், நாட்டின் முதல் துணை குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவையின் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் அறிவார்ந்த வார்த்தைகளை இந்திய தேசிய காங்கிரஸ் நினைவுகூர்கிறது.

மே 16, 1952 அன்று மாநிலங்களவையின் தொடக்க நாளில், மிகவும் புகழ்பெற்ற தத்துவ ஞானியும் கல்வியாளரும் எழுத்தாளரும் ராஜதந்திரியுமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறினார்:

'நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. அதாவது, இந்த அவையில் உள்ள ஒவ்வொரு கட்சியையும் சேர்ந்தவன். நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை, உயர்ந்த மாண்புகளை நிலைநிறுத்துவதும், யாருக்கும் விரோதமாக இல்லாமல், அனைவருக்குமான நல்லெணணத்துடன் ஒவ்வொரு கட்சியுடனும் நியாயமாகவும் பாரபட்சமின்றியும் செயல்படுவதும் எனது முயற்சியாக இருக்கும்.

எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் கொள்கைகளை நியாயமாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் விமர்சிக்க அனுமதிக்காவிட்டால், ஒரு ஜனநாயகம் ஒரு கொடுங்கோன்மையாக மாறி சீரழிந்துவிடும்.'

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்ன கூறினாரோ அதன்படி முழு உணர்வுடன் வாழ்ந்து காட்டினார்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in