

எந்த நேரத்திலும் தான், உத்தரப் பிரதேச முதல்வராக முடியும், என்று மதுரா தொகுதி பாஜக எம்.பி ஹேம மாலினி கூறியுள்ளார்.
பாலிவுட் திரைப்படங்களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கி பின்னர் அரசியலில் பிரவேசித்தவர் ஹேமமாலினி. அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
ஏஎன்ஐயிடம் அவர் தெரிவித்ததாவது:
"நான் விரும்பினால், ஒரு நிமிடத்தில் முதல்வராக முடியும், ஆனால் நான் அப்படியொரு பதவியில் என்னை பிணைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால் என் சுதந்திரம் பறிபோய்விடும். அத்தகைய ஒரு பொறுப்பு எடுத்துக்கொள்வதில் தனக்கு ஆர்வமில்லை.
விவசாயிகள், பெண்கள் மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்காக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. அவரைப் போன்ற ஒரு பிரதமரைக் கண்டறிவது கடினம், பிற கட்சிகளின் தலைவர்கள் எதையாவது சொல்லலாம், ஆனால் நாட்டிற்காக யார் நிறைய வேலை செய்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்’’
இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ராஜஸ்தானில் மனஸ்வாட் எனும் நகரில் ஆன்மிக விழாக்களில் பங்கேற்ற நிகழ்வுப் படங்களை சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
''ராஜஸ்தான் மாநிலம் மனஸ்வாட்டில் குரு பூர்ணிமாவுக்கு முன்தினம் உத்தம் மஹராஜ் சுவாமிக்காக மீரா நாட்டிய நிகழ்வில் இருந்தேன். அதன்பிறகு பிரசித்தி பெற்ற மிகவும் அழகான மாதா திரிபுர சுந்தரி கோவிலுக்குச் சென்றேன்'' என்று ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார்.