பயங்கரவாத சதி வழக்கு: தமிழகம் முதல் ஜம்மு காஷ்மீர் வரை 22 இடங்களில் என்ஐஏ சோதனை

பயங்கரவாத சதி வழக்கு: தமிழகம் முதல் ஜம்மு காஷ்மீர் வரை 22 இடங்களில் என்ஐஏ சோதனை
Updated on
1 min read

புதுடெல்லி: பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை இன்று (திங்கள்கிழமை) சோதனை நடத்தி வருகிறது.

பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக பிஹாரில் எட்டு இடங்களிலும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு இடத்திலும், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு இடங்களிலும், ஜம்மு-காஷ்மீரில் ஒன்பது இடங்களிலும் இன்று என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.

பயங்கரவாத சதி தொடர்பான உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த 22 இடங்களில் தனித்தனி என்ஐஏ குழுக்கள், இன்று ஒரே நேரத்தில் சோதனை நடவடிக்கையைத் தொடங்கின. தேச விரோத வலைப்பின்னலுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் மாநில காவல்துறையுடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்ட RC-1/2025/NIA/CHE என்ற வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில், நாட்டில் கலவரத்தை தூண்டி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகளில் தேசவிரோத வலைப்பின்னல் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து, சமீபத்திய மாதங்களில், பல்வேறு மாநிலங்களில் இதுகுறித்த விசாரணையை என்ஐஏ தீவிரப்படுத்தியுள்ளது. இதனையொட்டி நாடு தழுவிய நடவடிக்கைகள் மூலம் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டி பலர் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in