புற்றுநோயாளியான வங்கி அதிகாரிக்கு ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை

புற்றுநோயாளியான வங்கி அதிகாரிக்கு ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை
Updated on
1 min read

பஞ்சாப் நேஷனல் வங்கியின் உதவி மேலாளர் ஒருவருக்கு ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவிகுமார் பாரதி என்ற இந்த நபர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் புரோபேஷனரி அதிகாரியாகச் சேர்ந்தார். பிறகு 2007ஆம் ஆண்டு உதவி மேலாளராக பதவி உயர்வு பெற்றார்.

இவர் தனது பதவிக்காலத்தில் ரூ.15 லட்சத்திற்கும் மேல் வருவாய்க்கு அதிகாமாக சொத்துக்களைச் சேர்த்துள்ளார். இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்படுகையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாண்டே கூறியதாவது: குற்றவாளியின் வருவாயைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும்போது அவர் வருவாய்க்கு மீறி சொத்துக்களை குவித்துள்ளது தெரியவந்துள்ளது. ரூ.15,75,284 தொகை வருவாய் எப்படி வந்தது என்பதற்கு அவரிடம் விளக்கங்கள் இல்லை” என்றார்.

ஆகவே இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததோடு ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் மோசடி செய்து சேர்த்த ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு ஈடான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

46 வயதான ரவிகுமார் பாரதிக்கு நாக்கு மற்றும் தொண்டையில் புற்று நோய்க் கிருமி தாக்கியுள்ளது. இவரது மனைவியும் ரத்தப் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 2 வாரிசுகள் இருவரும் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

குடும்பத்தில் இவர் ஒருவர்தான் சம்பாத்தியம் உள்ளவர் என்று இவரது வழக்கறிஞர் வாதாடியதால் நீதிபதிகள் ரவிகுமார் பாரதியின் பொறுப்புகள் மற்றும் துன்பங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு குறைவான தண்டனையை வழங்கியதாகத் தெரிகிறது.

அரசுத் தரப்பு வழக்கறிஞரோ இவருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று வாதாடினார். மேலும் இதே நபர் மீது மற்றொரு வழக்கு சிபிஐ கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதாடினார்.

ஆனால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரவிகுமார் பாரதி மேல்முறையீடு செய்யலாம் என்று அவருக்கு ஜாமீன் வழங்கியது கோர்ட்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in