Last Updated : 31 Jul, 2018 12:56 PM

 

Published : 31 Jul 2018 12:56 PM
Last Updated : 31 Jul 2018 12:56 PM

இம்ரான் கானுடன் பேசிய பிரதமர் மோடி: ‘பாகிஸ்தானில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றும்’ என நம்பிக்கை

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்க உள்ள பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கானை தொலைப்பேசியில் தொடர்ந்து கொண்டு பேசி பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் ஜனநாயகத்தின் வேரூன்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு 119 இடங்கள் கிடைத்தது.

நாட்டில் தனிப்பெரும் கட்சியாக பிடிஐ உருவெடுத்துள்ளதால், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புதிய பிரதமராக பதவி ஏற்க இருக்கும் இம்ரான் கானை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

‘‘பாகிஸ்தானில் விரைவில் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் பிடிஐ கட்சியின் தலைவர் இம்ரான் கானை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது, பாகிஸ்தானில் ஜனநாயகத்தின் வேர்கள் ஆழமாகச் செல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பாகிஸ்தான் முழுவதும் அமைதியும், வளர்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்’’ எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள பிடிஐ கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘பிரதமர் மோடி அழைத்துப் பேசியதற்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். இருநாடுகளுக்கு இடையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

இரு நாடுகளிலும் இருக்கும் ஏழை மக்களின் வறுமையைப் போக்கும் விதமாக இருநாடும் இணைந்த செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். போருக்கும், ரத்தத்துக்கும் பதிலாக, பிரச்சினைகளைத் தீர்க்க முயல வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x