Last Updated : 21 Jul, 2018 06:21 PM

 

Published : 21 Jul 2018 06:21 PM
Last Updated : 21 Jul 2018 06:21 PM

அயோத்தியில் போலி சாதுக்களை களைய அடையாளம் அறியும் சோதனை: யோகி ஆதித்யநாத் உத்தரவு

உ.பி.யின் அயோத்தியில் போலி சாதுக்களைக் களைய அடையாளம் கண்டறியும் சோதனை தொடங்கி உள்ளது. உ.பி. போலீஸாரால் நடத்தப்படும் இந்த சோதனையில் அந்நகரவாசிகள் அனைவரது அடையாள அட்டை சரிபார்க்கப்படுகிறது.

பாஜக ஆளும் உ.பி.யின் தெய்வீக நகரம் அயோத்தி. இதனுடன் இரட்டை நகரமாக பைஸாபாத்தும் ஒட்டி அமைந்துள்ளது. இது ராமர் பிறந்த இடமாகக் கருதப்படுவதால் அங்கு பல ஆயிரக்கணக்கில் சாதுக்கள் தங்கி உள்ளனர். அங்குள்ள மடங்கள், ஆஸ்ரமங்கள், சாலை மற்றும் தெருக்களிலும் கண்கள் பட்ட இடம் எல்லாம் சாதுக்கள் திரிவதைப் பார்க்கலாம்.

இவர்களில் பலர் போலி சாதுக்களாகவும் இருந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகப் புகார் உள்ளது. இன்னும் சிலர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்கள் புரிந்து அதிலிருந்து தப்ப வேண்டி அயோத்தி வந்து விடுகின்றனர். இங்கு காவி உடைகளை அணிந்து சாதுக்களாக மறைந்து வாழ்வதும் வழக்கமாக உள்ளது.

இது தொடர்பாக உ.பி. முதல்வரும் சாதுவுமான யோகி ஆதித்யநாத்திடமும் பலர் புகார் அனுப்பியிருந்தனர். இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அவர்களை அடையாளம் கண்டு அயோத்தியில் இருந்து விரட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில், அயோத்தி மற்றும் பைஸாபாத்வாசிகளிடம் அவர்கள் தம் அடையாளங்களை நிரூபிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது, இந்த சோதனையின் போது பொதுமக்கள் மற்றும் சாதுக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து உ.பி. முதல்வர் அலுவலக அதிகாரிகள் வட்டாரம் ‘இந்து தமிழ்’இணையதளத்திடம் கூறும்போது, ''நேபால் போன்ற அண்டை நாடுகளிலிருந்து பலர் சாதுக்கள் போர்வையில் அயோத்தியில் அடைக்கலம் பெற்றுள்ளனர். இவர்களைக் கண்டறிந்த பின், உண்மையான சாதுக்கள் மீது ஒரு கம்ப்யூட்டர் அடிப்படையிலான புள்ளிவிவரம் தொகுக்கப்பட உள்ளன. இதன்மூலம், நம் நாட்டின் சாதுக்கள் மீதான மதிப்பு கூடும்'' எனத் தெரிவித்தனர்.

உ.பி. அரசின் இந்த முயற்சி அயோத்தியில் வெற்றி அடைந்த பின், மற்ற தெய்வீக நகரங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட உள்ளது. உ.பி.யில் வாரணாசி, மத்துரா மற்றும் அலகாபாத் ஆகியவையும் தெய்வீக நகரங்களாக உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x