

பூலான் தேவி கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஷேர்சிங் ராணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சம்பல் கொள்ளையராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் பூலான் தேவி. இவர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீர்சாபூர் தொகுதி எம்பி-யாக இருந்தார். கடந்த 2001-ம் ஆண்டு டெல்லியில் அசோகா சாலையில் உள்ள அவரது வீட்டு முன்பு 12 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக ஷேர்சிங் ராணா உள்ளிட்ட 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பூலான்தேவி கொள்ளைக்காரியாக இருந்த போது உயர் சமூகத்தைச் சேர்ந்த வர்களை கொன்றதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இக்கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இவ்வழக்கில், அரசு தரப்பில் 171 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இருதரப்பு விசாரணைக்குப் பின், டெல்லி கூடுதல் குற்றவியல் நீதிபதி பரத் பராசர் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், முக்கிய குற்றவாளியான ஷேர் சிங் ராணா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மற்ற 11 பேரில் பிரதீப் என்பவர் கடந்த ஆண்டு திகார் சிறையில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துவிட்டார்.
வழக்கில் தொடர்புடைய தன்பிரகாஷ் சேகர், ராஜ்வீர், ராஜீந்தர், அமித் ரத்தி, பிரவீன் மிட்டல், கேசவ் சவுகான், சுரீந்தர் சிங், விஜய், முஸ்தாகீன், சிராவன் ஆகிய 10 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதன் மூலம், கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்த பூலான் தேவி கொலை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.