“மதுரா, காசி ஆலய இயக்கங்களில் ஆர்எஸ்எஸ் பங்கேற்காது; ஆனால்...” - மோகன் பாகவத்

“மதுரா, காசி ஆலய இயக்கங்களில் ஆர்எஸ்எஸ் பங்கேற்காது; ஆனால்...” - மோகன் பாகவத்
Updated on
1 min read

புதுடெல்லி: மதுரா மற்றும் காசி கோவில்களுக்கான இயக்கங்களில் ஆர்எஸ்எஸ் பங்கேற்காது என்றும் அதேநேரத்தில் சுவயம்சேவகர்களை (ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை) அது தடுக்காது என்றும் அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100-ம் ஆண்டை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத், அயோத்தி, "மதுரா, காசி ஆகிய 3 கோயில்களும் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானவை. அயோத்தி கோயிலுக்காக ஆர்எஸ்எஸ் நேரடியாக களத்தில் இறங்கியது. எனினும், மதுரா மற்றும் காசி கோயில்களுக்கான இயக்கங்களில் ஆர்எஸ்எஸ் நேரடியாக பங்கேற்காது.

அதேநேரத்தில், சுவயம்சேவகர்கள் இத்தகைய இயக்கங்களில் பங்கேற்பதை ஆர்எஸ்எஸ் தடுக்காது. இந்த விஷயத்தில் அவர்கள் (முஸ்லிம்கள்) விட்டுக்கொடுத்து அவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு இந்த விவகாரம் வெறும் 3 கோயில்கள் சம்பந்தப்பட்டது மட்டுமே. இது சகோதரத்துவத்தை நோக்கிய பெரிய படியாக இருக்கும்.

கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற குரல் அதிகம் ஒலிக்கிறது. கோயில்களை பக்தர்களிடம் திருப்பி ஒப்படைக்க தேசிய மனம் தயாராக உள்ளது. ஆனால், கோயில்களை நடத்துவதற்கான சரியான அமைப்பு நடைமுறையில் இருக்க வேண்டும். உள்ளூர் மட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரை சடங்குகள், நிதி, பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் நீதிமன்றங்கள் ஒரு முடிவை வழங்கினால் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சங்கம் அதன் துணை அமைப்புகளுக்கு (பாஜக) உத்தரவுகளை இடுகிறது என்று கூறுவது தவறு. நான் 50 ஆண்டுகளாக ஷாகாவை நடத்தி வருகிறேன். அதை எப்படி நடத்த வேண்டும் என்று யாராவது எனக்கு ஆணையிட்டால், இது எனது நிபுணத்துவம் சார்ந்தது என்பதால் நான் கவலைப்படலாம். அதேபோல், ஒரு அரசை நடத்துவது என்று வரும்போது அதில் அவர்களுக்கு நிபுணத்துவும் உளளது. நாங்கள் அவர்களுக்கு பரிந்துரைகளை வழங்குகிறோம். அவர்கள் மீது எதையும் நாங்கள் திணிப்பதில்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மனதில் வேறுபாடுகள் இல்லை.

சில நேரங்களில் ஒருமித்த கருத்தை அடைய முடியாதபோது, அவர்கள் தங்கள் சொந்த சோதனையை செய்ய அனுமதிக்கிறோம். சங்கம் இவ்வாறுதான் செயல்படுகிறது. நாங்கள் (ஆர்எஸ்எஸூம் அதன் துணை அமைப்புகளும்) தனித்தனியாக நடந்தாலும் எங்களின் இலக்கு ஒன்றுதான், தேச வளர்ச்சிதான் அந்த இலக்கு" என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in