ட்ரம்ப் 4 முறை அழைத்தும் பேச மறுத்த பிரதமர் மோடி: ஜெர்மனி செய்தித்தாள் தகவல்!

ட்ரம்ப் 4 முறை அழைத்தும் பேச மறுத்த பிரதமர் மோடி: ஜெர்மனி செய்தித்தாள் தகவல்!
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியா மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்திய வாரங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேச நான்கு முறை முயற்சித்தார் என்றும், ஆனால் பிரதமர் மோடி அவருடன் பேச மறுத்துவிட்டார் என்றும் ஜெர்மனியை சேர்ந்த செய்தித்தாள் பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியா மீது, அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது. பிரேசில் நாட்டை தவிர வேறு எந்த நாட்டுக்கும் இவ்வளவு அதிகமான வரியை அமெரிக்க விதித்ததில்லை. இதன் காரணமாக, இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் கடினமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், ‘ட்ரம்ப் சமீபத்திய வாரங்களில் மோடியை நான்கு முறை அழைக்க முயன்றதாகவும், ஆனால் மோடி அந்த அழைப்புகளை ஏற்க மறுத்துவிட்டார் என்றும் பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் கூறுகிறது" என்று பெர்லினை தளமாகக் கொண்ட குளோபல் பப்ளிக் பாலிசி இன்ஸ்டிடியூட்டின் இணை நிறுவனர் தோர்ஸ்டன் பென்னர், அந்த செய்தித்தாள் அறிக்கையின் நகலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், ‘பிரதமர் மோடி பேச மறுப்பது அவரது கோபத்தின் ஆழத்தை நிரூபிக்கிறது, அதே நேரத்தில் அவரது எச்சரிக்கையையும் காட்டுகிறது’ என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியா மீது கூடுதல் வரிகளை விதித்த ட்ரம்ப், ஜூலை 31 அன்று, "இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. அவர்கள் ஒன்றாக தங்கள் இறந்த பொருளாதாரங்களை வீழ்த்துகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

இதற்கு ஆகஸ்ட் 10 அன்று மறைமுகமாக பதிலடி கொடுத்த பிரதமர் மோடி, இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக மாறுவதை நோக்கி முன்னேறி வருவதாக கூறினார்.

கடைசி பேச்சு: கடந்த ஜூன் 17 அன்று கடைசியாக பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் தொலைபேசி மூலம் பேசினார். கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் இருவரும் சந்திக்கவிருந்தனர். ஆனால் ட்ரம்ப் திட்டமிட்டதை விட முன்னதாகவே அமெரிக்கா திரும்பினார்.

இதற்குப் பிறகு, ட்ரம்பின் வேண்டுகோளின் பேரில், இரு தலைவர்களும் ஜூலை 17 அன்று தொலைபேசி அழைப்பில் பேசினர். இந்த உரையாடல் சுமார் 35 நிமிடங்கள் நீடித்தது.

அந்த பேச்சின்போது, பஹல்காம் தாக்குதலுக்கு ட்ரம்ப் தனது இரங்கலைத் தெரிவித்ததாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான தனது ஆதரவை தெரிவித்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியது. மேலும், இந்தியா பாகிஸ்தான் போரில் எந்த நாடும் மத்தியஸ்தம் செய்யவில்லை என்பதை பிரதமர் மோடி, ட்ரம்பிடம் உறுதிபடுத்தியதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in