பிஹார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை ஏற்க ராகுல் தயங்குவது ஏன்?

பிஹார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை ஏற்க ராகுல் தயங்குவது ஏன்?
Updated on
1 min read

புதுடெல்லி: ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு ஏற்கிறார். ஆனால், அவரது மகன் தேஜஸ்விவை பிஹார் முதல்வர் வேட்பாளராக ஏற்க ராகுல் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன், 'பாரத் ஜோடோ யாத்திரை’ நடத்திய ராகுல், பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் என்ற கருத்து எழுந்தது. இதற்கு எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினும், ஆர்ஜேடி தலைவர் லாலுவும் ஆதரவாக பேசியிருந்தனர்.

லாலுவின் மகனான தேஜஸ்வியும், ராகுல் காந்தியை பிரதமராக்குவது பற்றி வெளிப்படையாகப் பேசி வருகிறார். பிஹாரில் ராகுல் நடத்தும் வாக்காளர் உரிமை பேரணியில் அவருக்கு உறுதுணையாக இருக்கும் தேஜஸ்வி, இப்போதும் இதனை கூறி வருகிறார்.

ஆனால், பிஹார் தேர்தலில் முதல்வர் வேட்பாளருக்கான கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளிக்க தயங்கி வருகிறார். இந்தக் கேள்வியை மாநில காங்கிரஸ் தலைவர்களும் தவிர்த்து வருவதாக புகார்கள் உள்ளன. இது ஏன் என்ற கேள்வி ஆர்ஜேடி கட்சியினர் இடையே எழத் தொடங்கி உள்ளது.

இதன் பின்னணி குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பிஹார் காங்கிரஸ் தலைவர்கள் வட்டாரம் கூறும்போது, "கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் தவறுகளால் குறைவான தொகுதிகள் ஒதுக்க ஆர்ஜேடி திட்டமிட்டுள்ளது. அதேசமயம், கடந்தமுறை போல் அல்லாமல் இம்முறை பிஹாரில் முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளை காங்கிரஸ் கேட்க முடிவு செய்துள்ளது. எனவே. தொகுதிப் பங்கீட்டுக்கு முன்பாகவே தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக ஏற்க ராகுல் தயங்குகிறார்.

முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் காங்கிரஸ், ஆர்ஜேடி இடையே இதுபோல் தெளிவின்மை நீடித்தால், பாஜக கூட்டணி பயனடையும் வாய்ப்புகளும் உள்ளன” என்று தெரிவித்தன.

பிஹாரில் கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலில், மெகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஆர்ஜேடி 144 தொகுதிகளில் போட்டியிட்டு 75-ல் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் 70-ல் போட்டியிட்டு வெறும் 19-ல் மட்டுமே வெற்றி கண்டது. இதனால் மெகா கூட்டணி ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற புகாரும் எழுந்தது. இந்நிலையில் பிஹார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை ஏற்க ராகுல் தயங்கி வருவது சர்ச்சையாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in