ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? - எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அமித் ஷா விளக்கம்

ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? - எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அமித் ஷா விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவர் தனது உடல்நலக் குறைபாடுகள் காரணமாகவே ராஜினாமா செய்தார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தன்கர் வீட்டுக் காவலில் இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமித் ஷா அளித்த பேட்டியில்," ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதம் தெளிவாக உள்ளது. அவர் தனது ராஜினாமாவுக்கு உடல்நலக் காரணங்களையே குறிப்பிட்டுள்ளார். அவர் தனது சிறப்பான பதவிகாலத்துக்காக பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்” என்றார்

சில எதிர்க்கட்சித் தலைவர்கள் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறுவது குறித்து கேட்டபோது, “​​உண்மை மற்றும் பொய்களின் விளக்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மட்டுமே சார்ந்திருக்கக்கூடாது. இதையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தன்கர் ஒரு அரசியலமைப்பு பதவியை வகித்து அரசியலமைப்பின் படி தனது கடமைகளைச் செய்தார். தனிப்பட்ட உடல்நலக் காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்தார். இந்த விஷயத்தில் அதிகம் சிந்திக்கக்கூடாது" என்று கூறினார்.

ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர். தன்கர் வீட்டுக் காவலின் வைக்கப்பட்டுள்ளார் என்றும் சில எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், மூத்த தலைவருமான கபில் சிபல், ‘தன்கர் பொதுமக்களின் பார்வையில் இல்லை. இதுகுறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?’ என கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in