​​​​​​​இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்: விண்கலத்தை தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றி

விண்வெளியில் இருந்து பூமிக்கு விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான பாராசூட் சோதனை ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று நடத்தப்பட்டது. இதற்காக சினூக் ஹெலிகாப்டரில் 4 கி.மீ. உயரத்துக்கு விண்கலம்  எடுத்துச் செல்லப்பட்டது.படம்: பிடிஐ
விண்வெளியில் இருந்து பூமிக்கு விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான பாராசூட் சோதனை ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று நடத்தப்பட்டது. இதற்காக சினூக் ஹெலிகாப்டரில் 4 கி.மீ. உயரத்துக்கு விண்கலம் எடுத்துச் செல்லப்பட்டது.படம்: பிடிஐ
Updated on
1 min read

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்கலம் பாதுகாப்பாக கடலில் இறங்குவதற்கான பாராசூட் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன்மூலம் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல் கல்லை இஸ்ரோ எட்டியுள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வருகின்றன. இந்த பட்டியலில் 4-வது நாடாக இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது. இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப ககன்யான் என்ற திட்டம் தொடங் கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக ஷுபான்ஷு சுக்லா, அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகிய 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஷுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்துவிட்டு கடந்த ஜூலையில் பூமிக்கு திரும்பினார்.

இதை தொடர்ந்து, ககன்யான் திட்டப்பணிகளை இஸ்ரோ தீவிரப்படுத்தி உள்ளது. முதல்கட்டமாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்கலம் பாதுகாப்பாக கடலில் இறங்குவதற்கான பாராசூட் சோதனை, ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று நடத்தப்பட்டது. இந்திய விமானப் படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் சுமார் 4 கி.மீ. உயரத்துக்கு சிறப்பு விண்கலம் எடுத்துச் செல்லப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து விண்கலம் கீழே பறக்கவிடப்பட்டது. விண்கலம் பூமியை நோக்கிவிரைந்தபோது, சரியான நேரத்தில்3 பாராசூட்கள் விரிவடைந்து கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

இதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ‘ககன்யான் திட்டத்துக்காக விண்கலத்தை கடலில் இறக்கும் சோதனை நடத்தப்பட்டது. அப்போதுகுறித்த நேரத்தில் பாராசூட் விரிவடைந்து விண்கலம் பாதுகாப்பாக கடலில் இறங்கியது. இஸ்ரோ, டிஆர்டிஓ, இந்திய விமானப்படை, கடற்படை, கடலோர காவல் படை இணைந்து இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தின’ என்றும் இஸ்ரோ பதிவிட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வட்டாரங்கள் கூறியதாவது: ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு இறுதியில் ஆளில்லா விண்கலம் விண்ணில் செலுத்தப்படும். அந்த விண்கலத்தில் வயோமித்ரா என்ற ரோபோ விண்வெளிக்கு அனுப்பப்படும்.

2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் எச்எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சிறப்பு விண்கலத்தில் 3 வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் 7 நாட்கள் விண்வெளியில் தங்கிவிட்டு பூமிக்கு திரும்புவார்கள். இதன் முன்னோட்டமாக விண்கலம் பத்திரமாக கடலில் இறங்குவதற்கான பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய மைல்கல்லை இஸ்ரோ எட்டியுள்ளது. வரும் 2035-ம் ஆண்டில் இந்தியாவின் சார்பில் சொந்தமாக விண்வெளி நிலையம் கட்டப்படும். இந்த நிலையத்தில் இந்திய வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்வார்கள். வரும் 2040-ம் ஆண்டில் நிலவுக்கு இந்திய வீரர் அனுப்பப்படுவார். இவ்வாறு இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in