Published : 20 Jul 2018 08:32 AM
Last Updated : 20 Jul 2018 08:32 AM

மாணவர்களுடன் சாப்பிட்ட பின்னர் உடல் நலம் பாதிப்பு?- உடுப்பி சிரூர் மடாதிபதி மர்ம மரணம்

கர்நாடகாவில் உள்ள உடுப்பி சிரூட் மடத்தின் மடாதிபதி லக்ஷ்மிவர தீர்த்த சுவாமி (55) நேற்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பழமையான கிருஷ்ணர் கோயிலுக்கு சொந்தமாக 8 மடங்கள் உள்ளன. இதில் ஒன்றான சிரூர் மடத்தின் மடாதிபதியாக லக்ஷ்மிவர தீர்த்த சுவாமி (55) இருந்தார். இந்த மடத்தின் 30-வது மடாதிபதியான இவர், கிருஷ்ணர் கோயிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர நீண்ட காலமாக முயன்று வந்தார். இதனிடையே கிருஷ்ணர் கோயிலை நிர்வகிக்கும் பாலிமர் மடத்தை சேர்ந்த சாமியார்களுக்கு நிறைய குழந்தைகள் இருப்பதாக கூறி, சர்ச்சையை கிளப்பினார்.

கடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் உடுப்பியில் பாஜக சார்பில் களமிறங்க தீவிரமாக முயற்சித்து வந்தார். கடைசி நேரத்தில் பாஜக வாய்ப்பளிக்கா ததால் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

கடந்த மாதம், தனக்கு கீழ் இயங்கும் 6 அஷ்ட மடங்கள், கிருஷ்ணர் சிலைகளை விற்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் லக்ஷ்மிவர தீர்த்த சுவாமி கடந்த 16-ம் தேதி சிரூரில் மரம் நடும் விழாவில் பங்கேற்றார். பின்னர் கல்லூரி மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார். பிறகு வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட இவர், ஆசிரமத்திலே சிகிச்சை எடுத்துக்கொண்டார். உடல்நிலை சரியாகாத நிலையில் நேற்று முன் தினம் வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மணிப்பாலில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். இதனால் சோகத்தில் ஆழ்ந்துள்ள சிரூர் மட பக்தர்கள் மடாதிபதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக உடுப்பி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் கே.எம்.சி. மருத் துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “லக்ஷ்மிவர தீர்த்த சுவாமியின் உடலில் விஷம் கலந்துள்ளது. அது உணவு கெட்டுப் போனதால் உருவான விஷமா? அல்லது வேறு ஏதேனும் விஷமா? என உறுதியாகத் தெரிய வில்லை.

இரைப்பையில் இருந்து எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி இருக்கி றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.

இந்நிலையில் சிரூர் மடத்தின் வழக்கறிஞர் ரவி கிரண் கூறும்போது, “ லக்ஷ்மிவர தீர்த்த சுவாமியின் மரணத்தில் மர்மம் உள்ளது. கிருஷ்ணர் கோயிலில் அரங்கேறும் முறைகேடுகள் குறித்தும், அஷ்ட மடங்களின் சிலை விற்பனை குறித்தும் லக்ஷ்மிவர தீர்த்த சுவாமி கேள்வி எழுப்பினார். அவர் உணவில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறேன். கடந்த வாரம் என்னை அழைத்து கிருஷ்ணர் கோயிலை நிர்வகிக்கும் பாலிமர் மடாதிபதி வித்யதீஷ தீர்த்த சுவாமி மீது குற்றவியல் வழக்கு தொடுக்க வேண்டும். அஷ்ட மடங்களை சேர்ந்த சிலர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அதற்கான ஆவணங்களை தயார் செய்யுமாறு கூறினார். அதற்காக அவருக்கு மிரட்டல் வந்த நிலையில், தற்போது மர்மமான முறையில் இறந்திருக்கிறார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மன் நிம்பர்கி கூறும்போது, “இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே வழக்குப் பதிவு செய்வது பற்றி முடிவெடுக்க முடியும்” என்றார்.

மடாதிபதி லக்ஷ்மிவர தீர்த்த சுவாமி மர்மமான முறையில் இறந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x