ஒடிசா: எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மோகன் சரண் மாஜி

ஒடிசா: எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மோகன் சரண் மாஜி
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக்கை, முதல்வர் மோகன் சரண் மாஜி சந்தித்து நலம் விசாரித்தார்.

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக நவீன் பட்நாயக்கின் உடல் பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் அவசர அவசரமாக புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 77 மணி நேர தொடர் சிகிச்சைக்குப் பிறகு கடந்த புதன் கிழமை நவீன் பட்நாயக் வீடு திரும்பினார்.

நவீன் பட்நாயக் மருத்துவமனையில் இருந்தபோதே மாநில அமைச்சர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். விரைவில் பூரண நலம் பெற வாழ்த்து தெரிவித்தனர்.

நவீன் பட்நாயக் வீடு திரும்பிய அன்றே அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உடல்நலம் விசாரித்தார். மேலும், டெல்லிக்கு வந்து சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், நவீன் பட்நாயக்கை புவனேஸ்வரில் உள்ள அவரது இல்லமான நவீன் நிவாஸில் சந்தித்து முதல்வர் மோகன் சரண் மாஜி நலம் விசாரித்தார். இது தொடர்பாக முதல்வர் மாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை புவனேஸ்வரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் முன்பாக, “நான் தற்போது நலமாக இருக்கிறேன். மருத்துவர்களும் செவிலியர்களும் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்கள். என்னை நேரில் சந்திக்க விரும்புபவர்கள் எனது இல்லத்துக்கு வருவதை வரவேற்கிறேன்.” என நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பலரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in