விவசாயிகளின் நலன்களில் இந்தியா சமரசம் செய்யாது: அமெரிக்க வரிகளுக்கு ஜெய்சங்கர் கடும் எதிர்ப்பு

விவசாயிகளின் நலன்களில் இந்தியா சமரசம் செய்யாது: அமெரிக்க வரிகளுக்கு ஜெய்சங்கர் கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: விவசாயிகளையும் சிறு உற்பத்தியாளர்களையும் பாதுகாப்பதே இந்தியாவின் முன்னுரிமை என்றும் அதில் அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா 50%க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இது நியாயமற்றது, காரணமற்றது.

நமது விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் நலன்களில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதில் சமரசத்துக்கு இடமே இல்லை.

இந்தியா மீதான வரி உயர்வுக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாகக் கூறுகிறார்கள். இதன்மூலம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு இந்தியா நிதி அளிப்பதாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், இத்தகைய விமர்சனம் சீனாவுக்கு எதிராகவோ ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராகவோ பயன்படுத்தப்படுவதில்லை. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீதோ, அதிக அளவில் திரவ இயற்கை எரிவாயு வாங்கும் ஐரோப்பிய நாடுகள் மீதோ இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதில்லை.

ரஷ்யா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தகம், இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தகத்தைவிட பெரியது. எரிசக்தி விவகாரத்தை எடுத்துக்கொண்டாலும், அதிலும் ஐரோப்பிய ஒன்றியம்தான் பெரிய வர்த்தகர். ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதிகள் வளரந்துள்ளன என்றபோதிலும், ஐரோப்பிய ஒன்றியம் அளவுக்கு இல்லை.

நமது தேசிய நலனுக்கான முடிவுகளை நாம் எடுப்பது நமது உரிமை. அதுதான் சுயாட்சிக்கான அடிப்படை என்று நான் கூறுவேன்.

இந்தியா - அமெரிக்கா இடையே பதட்டங்கள் உள்ள போதிலும், பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இரண்டு நாடுகளுமே பெரிய நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையேயான கோடுகள் துண்டிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது எங்கே செல்கிறது என்பதைப் பார்ப்போம்" என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in