தர்மஸ்தலா வழக்கு: தவறான தகவல்களை அளித்ததாக புகார்தாரரை கைது செய்தது எஸ்ஐடி

தர்மஸ்தலா வழக்கு: தவறான தகவல்களை அளித்ததாக புகார்தாரரை கைது செய்தது எஸ்ஐடி
Updated on
1 min read

பெங்களூரு: தர்மஸ்தலா கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, இந்த விவகாரம் குறித்து புகாரளித்த 50 வயது தூய்மைப் பணியாளரை கைது செய்துள்ளது.

1995 முதல் 2014 வரை தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலிலில் தூய்மைப் பணியாளராக வேலைபார்த்த ஒருவர், நூற்றுக்கணக்கான பெண்கள் / சிறுமிகளின் சடலங்களைப் புதைத்ததாகப் பகிரங்கமாகக் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2014இல் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட பின்னர், தனது குடும்பத்துடன் தர்மஸ்தலாவை விட்டு வெளியேறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது குறித்து விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை உருவாக்கியது.

தர்மஸ்தலா வழக்கில் ஒரு புதிய திருப்பமாக, தவறான தகவல்களை அளித்து கர்நாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டி, இவ்விவகாரத்தில் புகார் தெரிவித்த 50 வயது தூய்மைப் பணியாளர் இன்று காலையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நேற்று இரவு முதல் விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

தனது குற்றச்சாட்டுகளை உண்மை என நிரூபிக்கும் வகையில், காவல்துறையினர் முன்பு புகார்தாரர் ஆரம்பத்தில் புதைக்கப்பட்ட மண்டை ஓடு ஒன்றை தோண்டி எடுத்துள்ளார். சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில், புகார்தாரர் ஆரம்பத்தில் சமர்ப்பித்த மண்டை ஓடு போலியானது என்று தெரியவந்தது. இதன் பின்னர் அவர் பொய் சாட்சியம் அளித்தல் மற்றும் தவறான ஆதாரங்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இன்று மாலை அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு, புகார்தாரர் மருத்துவ பரிசோதனைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக, புகார் தெரிவித்த அந்த நபர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘மண்அரிப்பு, காடுகளின் வளர்ச்சி மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக சில புதைகுழிகள் தொலைந்து போயிருக்கலாம். பகல் நேரத்தில் உடல்களை புதைப்பதை உள்ளூர்வாசிகள் பார்த்தனர். ஆனால் யாரும் எங்களைத் தடுக்கவோ அல்லது விசாரிக்கவோ இல்லை. கோயிலின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதால் எனக்கு என்ன லாபம்? நான் ஒரு இந்து, ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவன்”என்றார்.

சமீபத்தில், இவ்விவகாரம் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா சட்டப்பேரவையில் பேசுகையில், சிறப்பு விசாரணைக் குழு புகார்தாரரின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனக் கண்டறிந்தால், புகார்தாரருக்கு எதிராக சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in