Bihar SIR: “நீங்கள் ஏன் செயல்படவில்லை?” - அரசியல் கட்சிகள் மீது உச்ச நீதிமன்றம் காட்டம்

Bihar SIR: “நீங்கள் ஏன் செயல்படவில்லை?” - அரசியல் கட்சிகள் மீது உச்ச நீதிமன்றம் காட்டம்
Updated on
2 min read

புது டெல்லி: சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபட்டவர்களுக்கான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உதவுவதில், பிஹார் அரசியல் கட்சிகள் செயலற்ற தன்மையுடன் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

தேர்தல் ஆணையத்தால் பட்டியலிடப்பட்ட 11 ஆவணங்கள் அல்லது ஆதார் அட்டையை கொண்டு சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, பெயர்கள் நீக்கப்பட்டவர்களின் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு வழிகாட்டுமாறு பிஹாரின் 12 அரசியல் கட்சிகளுக்கு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இந்த அமர்வு அதன் முந்தைய விசாரணையில், வரைவுப் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் இந்த நீக்கத்தை எதிர்த்து தங்கள் ஆதார் அட்டைகளை ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என்று கூறியது.

இது குறித்து இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘பிஹாரில் உள்ள 12 அரசியல் கட்சிகளும் படிவம் 6 அல்லது ஆதார் அட்டையில் உள்ள 11 ஆவணங்களுடன் தேவையான படிவங்களை தாக்கல் செய்வதிலும், சமர்ப்பிப்பதிலும் மக்களுக்கு உதவ வேண்டும். பிஹாரில் அரசியல் கட்சிகளின் 1.68 லட்சத்துக்கும் மேற்பட்ட பூத்-லெவல் முகவர்கள் (BLA) இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், இதுவரை இரண்டு ஆட்சேபனைகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளின் செயல்படாத தன்மை குறித்து நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். அரசியல் கட்சிகளின் பூத்-லெவல் முகவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, அவர்கள் என்ன செய்கிறார்கள்? மக்களுக்கும் உள்ளூர் அரசியல் கட்சியினருக்கும் இடையே ஏன் இடைவெளி உள்ளது? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு உதவ வேண்டும். வரைவுப் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரில் எத்தனை பேர் உயிரிழந்தனர், எத்தனை பேர் தானாக முன்வந்து இருப்பிடத்தை மாற்றினர் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சரிபார்க்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், வாக்காளர்கள் விடுபட்டது குறித்த ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க தங்கள் தரப்பிலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை என்று வாதிட்டனர். நீதிமன்றம் இதை கவனத்தில் கொண்டு, 12 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளையும் வழக்கில் சேர்த்துக் கொண்டது.

ஆட்சேபனைகளைத் தனித்தனியாகவோ அல்லது வாக்காளர் அடையாள அட்டைதாரர்கள் ஆன்லைனிலோ விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிபதி சூர்யகாந்த் மீண்டும் வலியுறுத்தினார். அதுபோல நேரடியாக படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலும், அதிகாரிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதியில் பிஹாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், ஆகஸ்ட் 1 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில் பெரிய அளவிலான முறைகேடுகள் இருப்பதாகவும், உயிருடன் உள்ளவர்களில் பலர் வரைவுப் பட்டியலில் இறந்துவிட்டதாக கூறி நீக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in