பட்டியல் சமூகத்துக்கான 17% இடஒதுக்கீட்டை மூன்றாக பிரிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

பட்டியல் சமூகத்துக்கான 17% இடஒதுக்கீட்டை மூன்றாக பிரிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
Updated on
1 min read

பெங்களூரு: பட்டியல் சாதியினருக்கான 17 சதவீத இடஒதுக்கீட்டை மூன்றாக பிரிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பட்டியலின வலதுசாரிகள், பட்டியலின இடதுசாரிகள், தீண்டத்தக்க சாதியினர் என 3 உள்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

நீதிபதி ஹெச்என் நாகமோகன் தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் பட்டியலின சமூகத்துக்கான 17 சதவீத இடஒதுக்கீட்டை மூன்று பிரிவுகளாகப் பிரித்ததை கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில், பட்டியல் சமூகத்துக்கான 17 சதவீத இட ஒதுக்கீட்டில், பட்டியலின வலதுசாரிகளுக்கு 6 சதவீத உள் ஒதுக்கீடு, பட்டியலின இடதுசாரிகளுக்கு 6 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் லம்பானி, போவி, கோர்மா, கோர்ச்சா போன்ற தீண்டத்தக்க பட்டியல் சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் நாடோடி சமூகங்களுக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டில் 101 சாதிகள் பலனடைந்து வருகின்றன.

நாகமோகன் தாஸ் ஆணையத்தின் 1,766 பக்க அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்ட பிறகு, சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல்வர் சித்தராமையாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில், முதலில் பட்டியல் சமூகத்தை ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்க பரிந்துரைத்திருந்தது. ஆனால் அமைச்சரவை அதை மூன்று பிரிவுகளாகக் குறைத்தது.

இதுகுறித்து பேசிய கர்நாடக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் எச்.கே.பாட்டீல், அமைச்சரவை கூட்டம் பயனுள்ளதாக இருந்ததாகவும், அனைத்து பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் இதில் திருப்தி அடைந்ததாகவும் கூறினார்.

இடஒதுக்கீட்டு சலுகைகளை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக பட்டியலின இடஒதுக்கீட்டில் துணை வகைப்பாடுகளைச் செய்ய அனுமதித்து உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 2022-ல் தீர்ப்பளித்தது. அதனையடுத்து பட்டியலின சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.என்.நாகமோகன் தாஸ் தலைமையில் கடந்த பிப்ரவரி 21 ஆம் நாள் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. சரியாக 165-ஆம் நாள், அதாவது ஆகஸ்ட் 4-ஆம் தேதிஅதன் அறிக்கையை தாக்கல் செய்தது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in