மக்கள் குறைதீர் முகாமில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: நடந்தது என்ன?
புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று (புதன்கிழமை) காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது பாஜக. முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்றப் பின்னர் தனது இல்லத்தில் மக்களை நேரடியாக சந்தித்து முகாம்களைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரை முகாமுக்கு வந்த நபர் ஒருவர் தாக்கினார்.
நடந்தது என்ன? - முதல்வரை தாக்கிய அந்த நபரை போலீஸார் உடனடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையின்படி அந்த நபர் 41 வயதான ராஜேஷ் பாய் கிம்ஜி பாய் சக்காரியா என்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் ராஜ்கோட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா கூறுகையில், “தாக்குதலில் ஈடுபட்டவர் முதல்வர் கையை வேகமாகப் பிடித்து இழுத்துள்ளார். அதில், அவரது தலையில் லேசாக அடிபட்டது. தாக்குதலில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் நலமுடன் இருப்பதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் திடீரென நடந்த சம்பவத்தால் முதல்வர் சற்றே அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறினர். நான் முதல்வரை நேரில் சந்தித்தேன். முதல்வர் ரேகா குப்தா ஒரு துணிச்சலான பெண்மணி. அவர் தனது மக்கள் குறை தீர் முகாமை தொடர்வதாக கூறியுள்ளார். மற்றபடி முதல்வர் கன்னத்தில் மர்ம நபர் அறைந்தார், முதல்வர் மீது கல் வீசப்பட்டது போன்ற தகவல்கள் எல்லாம் வெறும் சித்தரிப்பே” என்றார்.
அவர் மீதான தாக்குதலுக்கு டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், “இது மன்னிக்க முடியாத குற்றம். ஒரு பெண்ணாக, ஒரு மகளாக டெல்லி மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் இரவு, பகலாக பணியாற்றி வருகிறார். அவர் மீது தாக்குதல் நடத்தியவரும், அந்த தாக்குதல் பற்றி புனைவுக் கதைகளைக் கூறுவோரும் கோழைகளே.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி, “முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தில், எதிர்ப்புக்கு இடமுண்டு, ஆனால் வன்முறைக்கு இடமில்லை. குற்றவாளிகள் மீது டெல்லி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும், முதல்வர் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார் என்று நம்புகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்றால்..? டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார். “இது மிகவும் வருத்தமளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் எவ்வளவு கண்டிக்கப்பட்டாலும் அது குறைவாகவே இருக்கும் என்று நான் உணர்கிறேன். ஆனால் இந்த சம்பவம் பெண்களின் பாதுகாப்பின் யதார்த்தத்தையும் அம்பலப்படுத்துகிறது. டெல்லி முதல்வருக்கே பாதுகாப்பாக இல்லை என்றால், ஒரு சாதாரண மனிதனோ அல்லது ஒரு சாதாரண பெண்ணோ எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?” என அவர் வினவியுள்ளார்.
