மும்பையில் 3-வது நாளாக தொடரும் கனமழை: பேருந்து, ரயில், விமான சேவைகள் கடும் பாதிப்பு

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கிய சாலை சந்திப்புகளில் மழைநீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நேற்று கடும் மழை பெய்த நிலையில், வெள்ளத்தின் நடுவே மிகவும் சிரமப்பட்டு, மூன்று சக்கர வாகனத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வரும் ஊழியர்கள்.படம்: பிடிஐ
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கிய சாலை சந்திப்புகளில் மழைநீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நேற்று கடும் மழை பெய்த நிலையில், வெள்ளத்தின் நடுவே மிகவும் சிரமப்பட்டு, மூன்று சக்கர வாகனத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வரும் ஊழியர்கள்.படம்: பிடிஐ
Updated on
1 min read

மும்பை: மும்பையில் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை கொட்டி வருவதால், பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பேருந்து, ரயில், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் கனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர்தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், நேற்று அதிகாலை பெய்த மழையால் அந்தேரி, காட்கோபர், நவி மும்பை மற்றும் தெற்கு மும்பையின் சில முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வெளியூர் செல்லும் பேருந்து, ரயில், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் மும்பை மாநகராட்சி நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்வதாலும், மாநகரம் முழுவதும் தண்ணீர் தேங்குவதாலும், அத்தியாவசிய தேவைகள் தவிர, மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு மும்பை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி, அரசுக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ரெட் அலர்ட்: மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை (ரெட் அலர்ட்) வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ளது. மும்பை, தானே, ராய்காட் மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கனமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள செம்பூரில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழையும், சிவாஜி நகரில் 5 செ.மீ. மழையும் பதிவானதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in