ரேணுகாசுவாமி கொலை வழக்கு: ஜாமீன் ரத்தானதால் கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் கைது

ரேணுகாசுவாமி கொலை வழக்கு: ஜாமீன் ரத்தானதால் கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் கைது
Updated on
1 min read

பெங்களூரு: ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.

பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகாசுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. அவர் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் அவர் சட்டத்துக்கு கட்டுப்பட்டவரே. நடிகர் தர்ஷன் உடனடியாக சரணடைய வேண்டும். அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்" என உத்தரவிட்டது.

மேலும், நடிகர் தர்ஷன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிறைக்குள் சலுகைகளைப் பெறுவது தொடர்பாக ஏதேனும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வந்தால் அதில் நீதிமன்றம் தலையிடும் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, நடிகர் தர்ஷனை தொடர்பு கொண்ட பெங்களூரு போலீசார் அவரை உடனடியாக சரணடையுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள தனது மனைவியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வருவதை அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். முன்னதாக, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பவித்ரா கவுடா உள்ளிட்ட 6 பேரையும் பெங்களூரு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in