Last Updated : 24 Jul, 2018 05:28 PM

 

Published : 24 Jul 2018 05:28 PM
Last Updated : 24 Jul 2018 05:28 PM

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: “ மதச் சம்பிரதாயங்கள், சடங்குகள் அரசியலமைப்புக்கு ஒத்துப்போக வேண்டும்” : உச்ச நீதிமன்றம் கருத்து

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுமுதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழையத் தடை செய்யும் மதச் சம்பிரதாயங்கள், சடங்குகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்ட கொள்கைகளுக்கு ஒத்துப்போக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 41 நாள் கடும் விரதம் இருந்து இருமுடி சுமந்துவரும் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்களுக்கு அனுமதியில்லை.

நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுவரை உள்ள பெண்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை எனக் கேள்வி எழுப்பியது. மேலும் இது பாலின சமத்துவத்துக்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்தது.

இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமையிலான நீதிபதிகள் பாலி நாரிமன், ஏஎம் கான்வில்கர், டிஓய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 18-ம் தேதி விசாரணை வந்த போது, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “ வழிபாடு செய்வது அனைவருக்கும் உள்ள சட்டப்படியான உரிமை. குறிப்பிட்டவர்களைக் கோயிலுக்கு வரக்கூடாது எனக் கூறுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே அனைத்துத் தரப்பினரும் கோயிலுக்குச் செல்லலாம். இதற்குத் தனியாக சட்டங்கள் தேவை. அரசியல் சட்டம் பெண்களுக்கு வழிபாட்டு உரிமையை வழங்கியுள்ளது “ எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமையிலான நீதிபதிகள் பாலி நாரிமன், ஏஎம் கான்வில்கர், டிஓய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, வாதிடுகையில், கடந்த 800 ஆண்டுகளுக்கும் மேலாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் நூற்றாண்டுகளாக நம்பிக்கையின் அடிப்படியில் பின்பற்றும் பழக்கத்தை நீதிமன்றம் சோதிக்க பார்க்கிறதா. மசூதிகளில் கூட பெண்கள் வழிபாடு செய்ய அனுமதிப்பதில்லை, மதநம்பிக்கை அடிப்படையில் செய்யப்பட்டுவரும் இந்தப் பழக்கத்தை சோதித்துப் பார்ப்பதாகும் எனத் தெரிவித்தார்.

அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறுகையில், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25,26ன்படி, எந்த மதத்தையும், மதப்பழக்கங்களையும் ஒருவர் சுதந்திரமாக பின்பற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதர் பொதுநலன், அரசு உத்தரவு, மற்றும் அறநெறி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தடுக்க முடியும். நம்மை பொருத்தவரை கடந்த 1950-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து அனைத்தும் அதற்குள் அடங்கிவிட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுமுதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழையத் தடை செய்யும் மதச் சம்பிரதாயங்கள், சடங்குகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்ட கொள்கைகளுக்கு ஒத்துப்போக வேண்டும்

மதச்சடங்கில் ஒரு பகுதியாக இருக்கும் 10 வயதுமுதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழையவிடாமல் பார்த்துக்கொள்ளும் பழக்கத்தைத் தேவஸ்தானம்தான் கடைப்பிடித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தேவஸ்தானம் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கும், இப்போது நீங்கள் வாதிடுவதற்கும் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன. கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மாதத்தின் முதல் 5 நாட்கள் அனைத்து வயதுப் பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள், கூட்டம் வரும் சபரிமலை சீஸன் நேரத்தில் மட்டுமே அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x