பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
மும்பை: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் தேனிலவுக்காக பஹல்காம் சென்ற கடற்படை அதிகாரி வினய் நர்வால் உயிரிழந்தார். கணவரின் உடல் அருகே அவரது மனைவி ஹிமான்ஷி கதறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வரும் 24-ம் தேதி தொடங்க உள்ள இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹிமான்ஷி பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்க உள்ளார். கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹலிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை தனுஸ்ரீ வர்மா,தொலைக்காட்சி தொடர் நடிகைகள் மீரா தியோஸ்தலே, பாவிகா சர்மா, யூ டியூபர் எல்விஸ் யாதவ் உள்ளிட்டோரும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
யூ டியூபர் எல்விஸ் யாதவ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஹிமான்ஷி கல்லூரியில் என்னுடன் படித்தவர். கணவரை இழந்து வேதனையில் தவிக்கும் அவரை செல்போனில் அழைத்துப் பேச தயக்கமாக இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
