“காணவில்லை” - சுரேஷ் கோபி மீது கேரள போலீஸில் புகார்

“காணவில்லை” - சுரேஷ் கோபி மீது கேரள போலீஸில் புகார்
Updated on
1 min read

நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியை காணவில்லை என கேரள போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவரான கோகுல் குருவாயூர் என்பவர் திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு சுரேஷ் கோபியை அந்தப் பகுதியில் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் "கடந்த இரண்டு மாதங்களாக, மத்திய அமைச்சராகவும் திருச்சூர் மக்களவை எம்.பியாகவும் இருக்கும் அவர், தொகுதியில் நடக்கும் எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை. மேயர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சரால் கூட அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொகுதியில் மத்திய அரசின் திட்டம் ஒன்றை தொடங்கி வைக்க சுரேஷ் கோபியை அவர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரிடம் அவர்களால் பேசமுடியவில்லை. அதுமட்டுமின்றி தொகுதில் யாராலும் அவரை சந்திக்க இயலவில்லை. அவருடைய அலுவலகத்துக்கு சென்றால் அவர் எங்கு இருக்கிறார்? எப்போது வருவார் என்று அங்குள்ள ஊழியர்களுக்கும் தெரியவில்லை.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று கேக் வழங்குவார் சுரேஷ் கோபி. ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் மீது பொய் வழக்கு பதியப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு அவரை எங்கும் காணவில்லை” என்று கோகுல் குருவாயூர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் கிளை அமைப்புகளில் ஒன்றான கேரள மாணவர் சங்கம், சுரேஷ் கோபிக்கு எதிரான பிரச்சாரங்களை முடுக்கி விட இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் சுரேஷ் கோபி தொகுதிக்கு வராதது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ள கேரள மாணவர் சங்கம், அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வரை போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in