டெல்லியில் கனமழை: தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர்

டெல்லியில் கனமழை: தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர்
Updated on
1 min read

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி நகரில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை பின்னிரவு அங்கு மழை பொழிவு தொடங்கியது. நகரின் பல்வேறு இடங்களில் இந்த மழைப் பொழிவு விடிய விடிய தொடர்ந்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்துள்ளது. மழை காரணமாக சாஸ்திரி பவன், ஆர்.கே.புரம், மோத்தி பாக், கித்வாய் நகர் பகுதியில் கனமழை பதிவானது. சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது.

இன்று (சனிக்கிழமை) ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படும் நிலையில் மழை பதிவான காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இன்று நாள் முழுவதும் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மிதமானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது விமான சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறுமாறு டெல்லி விமான நிலையம் தெரிவித்துள்ளது. மழைப் பொழிவு இருந்தாலும் விமான சேவை இயல்பாக இருப்பதாக எக்ஸ் தளத்தில் டெல்லி விமான நிலையம் ட்வீட் செய்துள்ளது. அதற்கான பணியில் தங்களது ஊழியர்கள் தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளது.

டெல்லி மட்டுமின்றி இமாச்சல் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலத்துக்கும் இன்று கனமழை எச்சரிக்கை கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in