தமிழகத்தில் ரூ.48,172 கோடி மதிப்பில் 45 சாலைத் திட்டங்கள்: மக்களவையில் நிதின் கட்கரி தகவல்

தமிழகத்தில் ரூ.48,172 கோடி மதிப்பில் 45 சாலைத் திட்டங்கள்: மக்களவையில் நிதின் கட்கரி தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழகத்தில் ரூ.48,172 கோடி மதிப்பில் 45 சாலைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 45 சாலைத் திட்டங்கள் 1476 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிறைவேற்றப்பட்டு வருவதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர், இந்தத் திட்டங்கள் 48,172 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறினார்.

மொத்தம் உள்ள 1,476 கிலோ மீட்டர் தொலைவிற்கான சாலைப் பணிகளில் 1,230 கிலோமீட்டருக்கான பணிகள் நிறைவடைந்து இருப்பதாகவும், பாரத் மாலா திட்டம் ஊரகப் பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் சாலை தொடர்புகளை மேம்படுத்துவதற்காகவும் அதன் வாயிலாக பொருளாதார மேம்பாடு, வர்த்தக பயன்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றிற்கு இந்த சாலைத் திட்டங்கள் பயனுள்ளதாக அமையும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

நிலம் கையகப்படுத்துவது, சாலைக் கட்டுமானத்திற்கு முந்தைய நடவடிக்கைகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதி தொடர்பான பிரச்சினைகள், கட்டுமான பொருட்கள், சந்தையில் கிடைப்பதில் உள்ள சிரமங்கள் போன்றவை சில திட்டங்கள் தாமதமாவதற்கும் அதன் மதிப்பீடு அதிகரிப்பதற்கும் காரணங்களாக அமைந்திருக்கின்றன என்று அமைச்சர் அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்

இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்கொள்வதற்கு ஏதுவாக பல்வேறு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். உதாரணமாக, நிலம் கையகப்படுத்தல் பணியை விரைந்து நிறைவேற்ற பூமி ராசி வலைதளத்தை அறிமுகம் செய்திருப்பதாகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளிலிருந்து விரைவாக ஒப்புதல் பெறுவதற்கு பரிவேஷ் வலைதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலமாக ஆன்லைன் வாயிலாக விரைந்து ஒப்புதல்களை பெற இயலும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் அந்த பதிலில் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in