“நியாயமற்ற நடவடிக்கை” - அமெரிக்காவின் 50% வரிவிதிப்புக்கு இந்தியா கண்டனம்

“நியாயமற்ற நடவடிக்கை” - அமெரிக்காவின் 50% வரிவிதிப்புக்கு இந்தியா கண்டனம்
Updated on
1 min read

இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து உத்தரவு பிறப்பித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீப நாட்களாக ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா குறிவைத்துள்ளது. இந்தியாவின் இறக்குமதிகள், சந்தை காரணிகளை அடிப்படையாக கொண்டு, 140 கோடி இந்திய மக்களின் ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒட்டுமொத்த நோக்கத்துடன் செய்யப்படுகின்றன என்பது உட்பட, இந்த விஷயங்களில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.

எனவே, பல நாடுகளைப் போலவே தன் சொந்த தேசிய நலனுக்காக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்க முடிவு செய்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த நடவடிக்கைகள் நியாயமற்றவை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு ஏற்கெனவே அறிவித்த 25% வரியோடு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு காரணமாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை இந்தியா செலுத்த வேண்டி உள்ளது. இது சீனாவை காட்டிலும் 20 சதவீதமும், பாகிஸ்தானை காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும்.

அமெரிக்கா​வுக்கு ஓராண்​டில் ரூ.8,650 கோடி அளவுக்கு இந்​தியா ஏற்​றுமதி செய்​கிறது. இது வர்த்தகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இருப்பினும் இந்த கூடுதல் விரி விதிப்பு வரும் 27-ம் தேதி முதல் அமலாகும் என தெரிகிறது. ட்ரம்ப் தனது உத்தரவில் 21 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in