பாஜகவுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியா? - மாயாவதி திட்டவட்ட மறுப்பு

பாஜகவுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியா? - மாயாவதி திட்டவட்ட மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பாஜக கூட்டணியிலோ அல்லது காங்கிரஸ் கூட்டணியிலோ பகுஜன் சமாஜ் கட்சி இல்லை என்று அதன் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ அல்லது காங்கிரஸின் இண்டியா கூட்டணியிலோ பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அனைவரின் நலன்; அனைவரின் மகிழ்ச்சி என்ற அம்பேத்கரின் கொள்கையை பிஎஸ்பி பின்பற்றி வருகிறது.

ஆனால், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான சாதிய மனப்பான்மை கொண்ட சில ஊடக நிறுவனங்கள், பிஎஸ்பியின் பிம்பத்தைக் கெடுக்கவும் அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றன. எனவே, இவ்விஷயத்தில் தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பாரத் சமாச்சார் ஊடகம் தனது யூடியூப் சேனலில், மாயாவதி பாஜகவுடன் கைகோர்த்துவிட்டார் என்றும் விரைவில் பெரிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் தவறான, நச்சுத்தன்மை வாய்ந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின் பின்னணியில் ஏதோ இருக்கிறது.

பிஎஸ்பியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பாரத் சமாச்சார் மேற்கொண்ட முயற்சி கடும் கண்டனத்துக்கு உரியது. தனது செயலுக்காக அந்த சேனல் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அரசியல் சதி திட்டத்தின் ஒரு பகுதியாக, ஊடகங்களின் இத்தகைய மோசமான தந்திரங்கள் விஷயத்தில் கட்சியினர் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாரும் உங்களை தவறாக வழிநடத்திவிடக் கூடாது. இதை ஒரு சிறப்பு வேண்டுகோளாக வைக்கிறேன். ஏனெனில், அம்பேத்ரிய பிரச்சாரத்தை பலவீனப்படுத்த சாதிய சக்திகள் மோசமான சதிகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in