Last Updated : 17 Jul, 2018 04:37 PM

 

Published : 17 Jul 2018 04:37 PM
Last Updated : 17 Jul 2018 04:37 PM

தேச நலனுக்குரிய விஷயங்களை ஆக்கப்பூர்வமாக விவாதிக்க மோடி வலியுறுத்தினார்: அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து அனந்த் குமார் பேட்டி

தேச நலனுக்குரிய விஷயங்கள், பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாக விவாதித்து, நாடாளுமன்றத்தைச் சுமுகமாக நடத்திச் செல்ல அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று  அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கிறது. ஏறக்குறைய 24 நாட்கள், 18 அமர்வுகள் நடத்தப்பட உள்ளது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலங்குதேசம் கட்சி, காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் வெவ்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், பட்ஜெட் கூட்டத்தொடர் முடங்கியது.

இந்நிலையில் மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிக்கும் வகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்திருந்தார். அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மழைக்காலக் கூட்டத்தொடரை மிகவும் சுமுகமாக நடத்திச் செல்ல அனைத்துக் கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தங்களின் பிரச்சினைகளை எழுப்ப உரிமை உண்டு. ஆனால், அந்தக் கோரிக்கைகள் அனைத்தும் மக்களின் நலன் சார்ந்ததாக, தேச முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆதலால், இரு அவைகளையும் அமைதியான முறையில், ஆக்கப்பூர்வமாக நடத்திச் செல்ல எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேச நலனுக்கு உகந்த விஷயங்களை எழுப்பி, ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தைக் கட்டுக்கோப்பான முறையிலும், அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்த அரசு கடமைப்பட்டுள்ளது. எந்தவிதமான பிரச்சினையாக இருந்தாலும், அது குறித்து எதிர்க்கட்சிகளுடன் அமர்ந்து தீர்க்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. நாடாளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாகமுறையில் நடத்திச் செல்ல அனைத்து வழிகளையும் அரசு திறந்துவைக்கிறது என மோடி தெரிவித்தார்.''

இவ்வாறு அனந்த் குமார் தெரிவித்தார்.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் பல்வேறு விஷயங்களை எழுப்பியுள்ளனர். குறிப்பாக எஸ்சி,எஸ்டி பிரிவினரை உயர்கல்வியில் நியமிப்பதில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்தது, பசு குண்டர்கள் தாக்குதலைத் தடுக்க புதிய சட்டம் கொண்டு வருதல் போன்றவற்றை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x