டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பு

டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபயிற்சி மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் இருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க நகையை பறித்துச் சென்றார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால், மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சுதா ராமகிருஷ்ணன், டெல்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், சாணக்யபுரியின் சாந்திபாத் பகுதியில் அவரும், திமுக மாநிலங்களவை எம்.பி. சல்மாவும் நேற்று காலை 6.15 மணி அளவில் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சுதாவின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பினார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சுதா புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: டெல்லி சாணக்யபுரியில் போலந்து தூதரகம் அருகே காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் எனது கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். நகையை இழுத்தபோது என்கழுத்தில் காயம் ஏற்பட்டது. சுடிதாரும் கிழிந்தது. உதவி கோரி கூச்சலிட்டோம். யாரும் உதவ முன்வரவில்லை.

பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள சாணக்யபுரி போன்ற முக்கியமான பகுதியில் மக்களவை உறுப்பினராக இருக்கும் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் தலைநகரில், உயர் பாதுகாப்பு மண்டலத்திலேயே ஒரு பெண் பாதுகாப்பாக நடக்க முடியாத சூழல் நிலவினால், வேறு எங்கு நாம் பாதுகாப்பாக உணர முடியும்.

குற்றவாளியை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். எனது 4 பவுன் நகையை மீட்டுத் தரவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். நகை பறிப்பு குறித்து அப்பகுதி காவல் நிலையத்திலும் சுதா எம்.பி. புகார் கொடுத்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in