​​​​​​​‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜேந்திர சோழன்: பிரதமர் மோடி புகழாரம்

​​​​​​​‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜேந்திர சோழன்: பிரதமர் மோடி புகழாரம்

Published on

வாராணசி: சிவபக்தி மற்றும் சைவ மரபின் மூலம், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற முழக்கத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தவர் ராஜேந்திர சோழன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினேன். மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் சைவ மரபின் பழங்கால மையம் ஆகும். வட இந்தியாவில் இருந்து கங்கை நீரை பெற்று, வடக்கையும், தெற்கையும் அவர் இணைத்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவபக்தி மற்றும் சைவ மரபின் மூலம் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற முழக்கத்தை ராஜேந்திர சோழன் அறிவித்தார். இன்று, காசி - தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அதே கொள்கையை நாம் முன்னெடுத்து செல்கிறோம். ராஜேந்திர சோழன் கங்கை நீரை எடுத்து சென்றதுபோல, ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு நானும் கங்கை நீருடன் அங்கு சென்றேன். கங்கை நீரால் சுவாமிக்கு பூஜை செய்தேன். அன்னை கங்கையின் ஆசீர்வாதத்தால் மிகவும் புனிதமான சூழலில் அங்கு பூஜை நிறைவடைந்தது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்புகள் மிகுந்த உத்வேகத்தை அளிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in