ஜார்க்கண்டில் வீட்டுக்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க உதவிய தந்தை, மகளுக்கு விருது!

பிரதிநித்துவப் படம்
பிரதிநித்துவப் படம்
Updated on
1 min read

ராஞ்சி: தங்கள் வீட்டுக்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க வனத்துறைக்கு உதவிய நபர் மற்றும் அவரது மகளை ஜார்க்கண்ட் வனத்துறை பரிசுத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது.

முரி காவல் நிலையப் பகுதியில் உள்ள மர்து கிராமத்தில் உள்ள புரந்தர் மஹ்தோ என்பவரின் வீட்டுக்குள் கடந்த ஜூன் 25 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் ஒரு ஆண் புலி நுழைந்தது. இதனை அறிந்த மஹ்தோவின் மகள் சோனிகா குமாரி மற்றும் மற்றொரு பெண் தந்திரமாக வீட்டை விட்டு வெளியேறினர். அதன்பின்னர் மஹ்தோ, தனது மகளுடன் சேர்ந்து, வீட்டின் வெளிப் பகுதியில் இருந்து கதவைப் பூட்டினார்.

வீட்டுக்குள் வைத்து புலியை பூட்டிய பிறகு, அவர்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக பலமவ் புலிகள் காப்பகத்திலிருந்து மீட்புக் குழு சம்பவ இடத்தை அடைந்து புலியை வெற்றிகரமாக கூண்டில் அடைத்தனர். மறுநாள், அந்தப் புலி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ராஞ்சியில் நடைபெற்ற 76-வது வன மஹோத்சவ கொண்டாட்டத்தின்போது, வன மேம்பாடு மற்றும் பாதுகாப்பில் ஆற்றிய பங்களிப்பிற்காக மஹ்தோ மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகள் சோனிகா குமாரிக்கு ரூ.1.20 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், வன பாதுகாப்பில் அவர்களின் பணிக்காக ரூ.21,000-க்கான காசோலையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவை சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்தோ, அமைச்சர் ராதாகிருஷ்ண கிஷோர் ஆகியோர் அவர்களுக்கு காசோலைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் கிஷோர், ஜார்க்கண்டில் தற்போது சுமார் 30 சதவீத வனப்பகுதி மட்டுமே இருப்பதாகவும், இது 1960-70-ல் 45 முதல் 55 சதவீதம் வரை இருந்ததாகவும் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in