

கொல்கத்தாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பள்ளி, பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் 22 பேருக்கு இலவசமாக அடைக்கலம், உணவு மற்றும் கல்வி அளிக்கின்றனர்.
பாராக்போர் என்ற பகுதியிலுள்ள ராமகிருஷ்ணா விவேகானந்தா மிஷன் வளாகத்தில்தான் இத்தகைய நற்பணி நடந்து வருகின்றது.
அக்குழந்தைகளின் தாய்மார்கள் வாழும் துயர வாழ்க்கையிலிருந்து அவர்களை விலக்கி, சராசரி குழந்தைகளுடன் அவர்களை தங்க வைத்துள்ளனர்.
இதுகுறித்து மிஷன் செயலர் சுபங்கர் மஹாராஜ் கூறுகையில்,”நாங்கள் ஆதரவற்ற குழந்தைகளையும், குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளையும் ஒரே இடத்தில்தான் தங்க வைக்கிறோம். அவர்களும் ஒருவருகொருவர் நன்றாக பழகுகின்றனர். பலதரப்பட்ட பிண்ணனி கொண்டுள்ள குழந்தைகள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக தங்க வைத்து, கல்வி கற்றுக்கொடுப்பதுதான் எங்களுடைய வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்”, என்று தெரிவித்தார்.
ஆள் கடத்தல் வியாபாரத்தை எதிர்த்து அரசு சாரா அமைப்பான "அப்னே ஆப் வூமன் வெல்ட்விட்” (Apne Aap Women Worldwide), சோனாகாச்சி மற்றும் கிடிர்பூர் ஆகிய பகுதிகளில் பாலியல் தொழில் செய்து வாழும் தாய்மார்களிடமிருந்து அவர்களது குழந்தைகளை மீட்டு, இந்த தொண்டு நிறுவனம் நடத்தும் பள்ளியில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பில் பணிபுரியும் ஷஹானா தாஸ்குப்தா கூறுகையில்,”கடந்த சில வருடங்களாக, ஆள் கடத்து வியாபாரத்தில் சிக்கி தவிக்கும் சிறுமிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதனால், சிறுமிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதே சமயத்தில், அந்த பகுதியில் வளரும் சிறுவர்கள் வளர்ந்தபின், பாலியல் ஆள் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்”, என்று தெரிவிக்கிறார்.
6 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமியர்கள், ஆரம்பத்தில் தங்கள் தாயைப் பிரிந்து வாழ சிரமப்பட்டனர். பின், அவர்கள் இந்த சூழலுக்கு ஏற்ப பழகிக்கொண்டனர்.
“நான் சிவப்பு விளக்கு பகுதியில் வசிக்கும்போது, பள்ளி செல்லாமல், வீட்டு வேலைகள் செய்துக்கொண்டிருந்தேன். ஆனால், தற்போது பாடம் படிப்பதையும், நண்பர்களுடன் விளையாடுவதையும் தவிர வேறு வேலையில்லை”, என்று அங்கு படிக்கும் பத்து வயது சிறுமி ஒருவர் தெரிவித்தார்.
14 வயதாகும் சிறுவன் ஒருவர் எதிர்காலத்தில் தான் ராணுவ வீரர் ஆக போவதாகவும், அதன்பின் பாலியல் தொழிலிலிருந்து தனது தாயை விடுவிப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இவர்கள் பள்ளி படிப்பை முடித்தபின், அனைவருக்கும் பல்வேறு துறைகளில் பயிற்சி அளிக்கவிருப்பதாக சுபந்கர் மஹாராஜ் என்று தெரிவித்தார்.