ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தர்ஷன் ரசிகர்கள் மீது நடிகை ரம்யா புகார்: நடவடிக்கைக்கு கர்நாடக அரசு உறுதி

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தர்ஷன் ரசிகர்கள் மீது நடிகை ரம்யா புகார்: நடவடிக்கைக்கு கர்நாடக அரசு உறுதி

Published on

பெங்களூரு: முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான ரம்யாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் தெரிவித்தார்.

கன்னட நடிகர் தர்ஷன் தனது காதலி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ரேணுகா சாமி என்ற ரசிகரை அடித்து கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு கைதானார். அவருக்கு இரு மாதங்களுக்கு முன்பு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தது. இதற்கு கன்னட திரைப்பட நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா, “கொல்லப்பட்ட‌ ரேணுகா சாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் ரம்யாவை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தனர். மேலும் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கொலை மிரட்டல், பலாத்கார மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய 11 பேரின் பெயர்களை குறிப்பிட்டு ஸ்கிரீன் ஷாட் பகிர்ந்தார்.

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது, “தர்ஷனின் ரசிகர்கள் என‌க்கு ஆபாச குறுஞ்செய்திகள் மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். முன்னாள் எம்பியும் நடிகையுமான எனக்கு எவ்வித பயமும் இல்லாமல் பகிரங்கமாக பலாத்கார மிரட்டல் விடுக்கின்றனர். இது போன்ற ஒழுக்கமற்றவர்கள் தான் பெண்களை துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

இதனிடையே கர்நாடக மகளிர் ஆணையம், ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்தவர்களை சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூறுகையில், “ரம்யாவின் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படும். அவருக்கு மிரட்டல் விடுத்த நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு காவல் ஆணையரிடம் இதுகுறித்து பேசியுள்ளேன். இத்தகைய மிரட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in