ஆந்திர டிஜிபி முன்னிலையில் 21 நக்சலைட்கள் சரண்

ஆந்திர டிஜிபி முன்னிலையில் 21 நக்சலைட்கள் சரண்

Published on

விஜயவாடா: ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா முன்னிலையில் நேற்று 21 நக்சலைட்கள், ஆயுதங்களுடன் சரண் அடைந்தனர்.

ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதிகளில் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் சிஆர்பிஎப் மற்றும் அந்தந்த மாநில போலீஸார் இணைந்து கூட்டாக நக்சலைட்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாதுகாப்பு படையினர், நக்சலைட்கள் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

இதில் சமீப காலமாக நக்சலைட்கள் பலர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டு வருகின்றனர். இதில் முக்கிய தலைவர்களும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் நக்சலைட்களின் பலம் இப்பகுதிகளில் கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று விஜயவாடாவில் ஆந்திர போலீஸ் டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா முன்னிலையில் 21 நக்சலைட்கள் சரண் அடைந்தனர். இவர்களில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

இவர்கள் தங்களிடம் இருந்த ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், தோட்டாக்கள், பல்வேறு வகை வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்களை ஒப்படைத்தனர்.

இவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி மறுவாழ்வு அளிக்கப்பட உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in