நடப்பாண்டில் 12 ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

நடப்பாண்டில் 12 ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
Updated on
1 min read

திருச்சி: நடப்பாண்டு 12 ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார்.

என்ஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோ, நாசா இணைந்து நிசார் சிந்தடிக் அப்ரசர் ரேடார் செயற்கைக்கோளை வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவ உள்ளன. இது ஜிஎஸ்எல்வி எஃப்-16 வரிசையில் 18-வது ராக்கெட்டாகும். இந்த செயற்கைக்கோள் நிலநடுக்ககம், புயல், பெருமழை உள்ளிட்ட பேரிடர்கள் குறித்த தகவல்களை துல்லியமாக தரக்கூடியது.

இஸ்ரோ நடப்பாண்டு 12 ராக்செட்களை விண்ணில் ஏவ உள்ளது. ரோபோவுடன் கூடிய ககன்யான் ஜி-1 ஆளில்லா செயற்கைக்கோளை டிசம்பரில் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். ககன்யான் திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்த திட்டத்தில், இந்​தி​ய விண்வெளி வீரரை ராக்கெட் மூலம் விண்​ணுக்கு அனுப்​பி, அவரை அங்கே பாது​காப்​பாக வைத்​திருந்​து, மீண்​டும் அவரை பூமிக்கு அழைத்து வர இருக்​கிறோம். இதற்கான ஆராய்ச்சிகள் முடிந்துவிட்டன.

சர்வதேச அளவில் விண்வெளித் துறையில் இந்தியர்களின் பங்கு முக்கியமானது. விண்ணில் ஏவிய ராக்கெட்டை நிலைநிறுத்தி, அதில் ஏற்படும் குறைகளை சரி செய்து, மீண்டும் விண்ணில் அனுப்பும் திறமை வாய்ந்தவர்கள் இந்திய விஞ்ஞானிகள். அப்துல் கலாம் கூறியதுபோல உலகிலேயே விண்வெளி துறையில் 2-வது சாதனை புரியும் நாடாக இந்தியா உள்ளது. இவ்வாறு நாராயணன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in