Published : 02 Jul 2018 07:22 AM
Last Updated : 02 Jul 2018 07:22 AM

ஜிஎஸ்டி வரி ஓராண்டு நிறைவு விழா; 400- பொருட்களுக்கு வரி குறைப்பு: பிரதமர் நரேந்திர மோடி தகவல்

சுமார் 400 வகையான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது. 150 வகையான பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி நள்ளிரவில் அமலுக்கு வந்தது. இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் நேற்று ஜிஎஸ்டி தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த வரிவிதிப்பு தொடர்பாக ‘சுயராஜ்யா’ இதழுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

அனைத்து பொருட்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும். அதாவது 18 சதவீத வரியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நண்பர்கள் வலியுறுத்துகிறார்கள். தற்போது உணவு பொருட்களுக்கு பூஜ்ஜியம் முதல் 5 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. காங்கிரஸின் விருப்பப்படி 18 சதவீத வரி விதித்தால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயரும். பாலுக்கும் விலை உயர்ந்த மெர்சிடஸ் காருக்கும் ஒரே ஜிஎஸ்டி வரி விதிப்பது நியாயமாகுமா?

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 66 லட்சமாக இருந்தது. ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்ட ஓராண்டில் புதிதாக 48 லட்சம் நிறுவனங்கள் முறைப்படி பதிவு செய்துள்ளன. நாடு முழுவதும் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. மாநிலங்களின் எல்லையில் சரக்கு வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. இதன்காரணமாக சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது. உற்பத்தி பெருகியுள்ளது. ஜிஎஸ்டி வரி குழப்பமாக இருந்தால் இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்?

17 விதமான வரிகள், 23 செஸ் வரிகள் ஒரே வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. சில நடைமுறை பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. ஜிஎஸ்டி வரி தொடர்பாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளும் பரிசீலிக்கப்படுகின்றன. பொதுமக்கள், வர்த்தகர்களின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. 400 வகையான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது. 150 வகையான பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக அரிசி, கோதுமை, சர்க்கரை, மளிகை பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டிருக்கிறது. அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது அல்லது 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் அனைத்து வர்த்தகமும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி குறையும்

ஜிஎஸ்டி வரி வசூல் மாதத்துக்கு ரூ.1 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 28 சதவீத வரி வரம்பில் உள்ள பொருட்களின் வரி குறைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 21-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. சிமென்ட், பெயின்ட், டிஜிட்டல் கேமரா ஆகியவை மீதான வரியைக் குறைக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக நிதியமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்தால் அதன் பலனை நுகர்வோர்களுக்கு அளிக்கவே அரசு விரும்புகிறது. வருவாய் அதிகரிக்கும்போது வரி விகிதங்கள் குறைக்கப்படும். பலமுனை வரிகள் நீக்கப்பட்டு ஒரே வரியாக ஜிஎஸ்டி அமல் செய்யப்பட்டிருப்பதால் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜிஎஸ்டி வரி மூலம் கடந்த ஆண்டு ரூ.12 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு வருவாய் ரூ.13 லட்சம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று நடந்த ஜிஎஸ்டி தின விழாவில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், மூத்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை காரணமாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஓய்வில் இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் விழாவில் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x