எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு - ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள்
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை சுமுகமாக நடைபெற்று வருகிறது. ஓய்வு பெறும் வைகோ உள்ளிட்ட எம்பிக்களுக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவை இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்குக் கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தைத் தொடங்கினார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்தை தொடர ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

"மிகுந்த நம்பிக்கையோடு மக்கள் எம்பிக்களை தேர்ந்தெடுத்து அவைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாாக அனைவரும் இருக்க வேண்டும். இந்த அவையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதை எம்பிக்கள் அனைவரும் உணர வேண்டும். இதுபோல நடந்து கொள்ளக்கூடாது. அனைவரும் அவரவர் இருக்கையில் அமர வேண்டும். கேள்வி நேரம் தொடர ஒத்துழைக்க வேண்டும்" என ஓம் பிர்லா வலியுறுத்தினார்.

இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்பிக்கள், தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால், அவையை 2 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

மாநிலங்களவை எம்பிக்கள் வைகோ, பி.வில்சன், சண்முகம், சந்திரசேகரன், முகம்மது அப்துல்லா ஆகியோர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவர்களுக்கான பிரிவு உபசார விழா மாநிலங்களவையில் நடைபெற்றது. இதையடுத்து, வைகோ உள்ளிட்டோர் தங்கள் அனுபவங்கள் குறித்து உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து அவர்களின் பங்களிப்பு தொடர்பாக பிற எம்பிக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in