தர்மஸ்தலா கோயில் விவகாரம்: யூடியூப் நிறுவனத்தின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: யூடியூப் நிறுவனத்தின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: தர்மஸ்தலா கோயிலில் பெண்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது தொடர்பாக வெளியாகும் தகவல்களில், கோயில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்கடேவின் சகோதரர் ஹர்ஷேந்திர குமாருக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதை தடைசெய்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று ( ஜூலை 23) மறுத்துவிட்டது.

‘தேர்ட் ஐ’ என்ற யூடியூப் சேனலுக்காக ஆஜரான வழக்கறிஞர் வேலன், இந்த மனுவை முன்கூட்டியே பட்டியலிட வாய்மொழியாகக் கோரிக்கை வைத்தார். அப்போது இந்த விவகாரத்தில் முதலில் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அறிவுறுத்தினார்.

‘தேர்ட் ஐ’ என்ற யூடியூப் சேனல் தாக்கல் செய்த அந்த மனுவில், ‘இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட்ட சிவில் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். பெங்களூரு சிவில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, தர்மஸ்தலா கோயிலில் நடந்த கடுமையான குற்றங்கள் தொடர்பான விசாரணையை நேரடியாகத் தடுக்கிறது. இது பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் மீதான நேரடித் தாக்குதலாகும்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? - கர்​நாடக மாநிலம் தட்​சின கன்னட மாவட்​டம் தர்​மஸ்​தலா​வில் உள்ள மஞ்​சு​நாதா கோயில் மிகவும் பிரசித்தி பெற்​றது. அந்த கோயி​லில் 10-க்​கும் மேற்​பட்ட பெண்​கள் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்க‌ப்பட்​டு, கொலை செய்​யப்​பட்​ட​தாக தகவல் வெளி​யானது. இதுகுறித்து தர்​மஸ்​தலா கோயி​லில் துப்​புரவு பணி​யாற்​றிய 52 வயதான ஒரு​வர், போலீ​ஸில் புகார் அளித்​தார். இதையடுத்து தர்மஸ்தலா போலீ​ஸார் கோயில் நிர்​வாகத்​தின் மீது 3 பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இதனை தொடர்ந்து 65 வயதான பெங்​களூரு​வைச் சேர்ந்த பெண் ஒரு​வர், ‘‘கடந்த 2003ம் ஆண்டு தர்​மஸ்​தலா கோயிலுக்கு சென்ற எனது 22 வயது மகள் திடீரென காணா​மல் போனார். இதுகுறித்து போலீ​ஸில் புகார் அளித்த போது, என்னை தாக்கி சித்​ர​வதை செய்தனர். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்​டும்'' என குடியரசு தலை​வருக்கு கடிதம் எழு​தி​யுள்​ளார். இதையடுத்து தர்​மஸ்​தலா பாலியல் கொலைகள் வ‌ழக்கு விவகாரத்தில் டிஜிபி பிர​னாப் மொஹந்தி தலை​மையி​லான சிஐடி விசா​ரணைக்கு கர்​நாடக அரசு உத்​தர​விட்டுள்ளது.

இந்த சூழலில், தர்மஸ்தலாவில் பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், கோயிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி செய்தி வெளியிட பெங்களூரு சிவில் நீதிமன்றம் தடை விதித்தது. அதற்கு முன்னதாக வீரேந்திர ஹெக்டே பற்றி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட 8,000-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அழிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in