மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ்
மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ்

ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை அடுத்து மாநிலங்களவையை வழிநடத்தும் ஹரிவன்ஷின் பின்புலம் என்ன?

Published on

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, மாநிலங்களவையை நடத்தும் பொறுப்பை அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஏற்றுள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக இருப்பவரே மாநிலங்களவையின் தலைவராக (சேர்மன்) இருந்து அவையை நடத்துவது மரபு. அவர் அவையில் இல்லாத தருணங்களில் அவையை துணைத் தலைவர் நடத்துவார். தற்போது மாநிலங்களவையின் துணைத் தலைவராக ஹரிவன்ஷ் உள்ளார். பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஹரிவன்ஷ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து அக்கட்சியின் மூலம் 2014ம் ஆண்டு முதன்முறையாக பிஹாரில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வானார்.

இதையடுத்து, 2018-ம் ஆண்டு ஹரிவன்ஷ் மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 40 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி வசம் இருந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியை பெற்ற காங்கிரஸ் அல்லாத 3-வது தலைவராக ஹரிவன்ஷ் பெயர் பெற்றார். பின்னர், 2020-ம் ஆண்டு மாநிலங்களவையின் துணைத் தலைவராக இரண்டாவது முறை ஹரிவன்ஷ் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அவர் இன்று மாநிலங்களவைக்கு வரவில்லை. அவர் வராத நிலையில், துணைத் தலைவரான ஹரிவன்ஷ், மாநிலங்களவையை வழிநடத்தினார். புதிய குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, மாநிலங்களவையை முழு அளவில் வழிநடத்தும் பொறுப்பு ஹஷரிவன்ஷ் வசம் வந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in