கருப்புப் பணம்: விசாரணை வலையில் 600 இந்தியர்கள்

கருப்புப் பணம்: விசாரணை வலையில் 600 இந்தியர்கள்
Updated on
1 min read

அயல்நாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய புதிய பட்டியல் ஒன்றை மத்திய பொருளாதார புலனாய்வுக்கழகம் பெற்றுள்ளது. இதில் உள்ள 600 இந்தியர்கள் தற்போது விசாரணை வலையில் சிக்கியுள்ளனர்.

மத்திய நிதியமைச்சகத்தின் மிக முக்கிய அங்கமான மத்திய பொருளாதார புலனாய்வுக் கழகம், தகவல் பரிமாற்ற அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான கணக்குகள் குறித்த பட்டியலை நடந்து முடிந்த நிதியாண்டில் பெற்றது.

சந்தேகத்திற்கிடமான முறையில் அயல்நாட்டில் கணக்கு வைத்திருக்கும் 600 இந்தியர்கள் பெயர் பட்டியல் வருமான வரித் துறை, அமலாக்க இயக்குனரகம், நிதிப்புலனாய்வு கழகம், வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஆகியவற்றின் முக்கிய அதிகாரிகளுக்கு மேல் விசாரணைக்காக அளிக்கபப்ட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு, வரி ஏய்ப்பு, அந்நியயச் செலாவணிச் சட்ட மீறல் ஆகியவை குறித்து இவர்கள் மீது கடும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

முதல் முறையாக மத்தியப் பொருளாதார புலனாய்வுக் கழகத்திற்கு இந்தப் பட்டியல் வந்துள்ளது. பொதுவாக இது போன்ற முக்கியத் தகவல்கள் நேரடி வரி மத்திய வாரியத்திடம் மட்டுமே பகிரப்படும்.

வரி ஏய்க்க தோதான 4 நாடுகளில் உள்ள வங்கிகளில் இந்த நபர்கள் கணக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கருப்புப் பணத்தை ஒழித்துக் கட்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அதன் படி அவர்களிடமும் இந்தப் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 600 நபர்கள் மீது இந்தக் குழுவும் தங்களது கிடுக்கிப் பிடி விசாரணையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in