'இந்தியா இறந்தால் யார் வாழ முடியும்?' - நேருவின் வார்த்தைகளில் காங்.-க்கு சசி தரூர் பதில்

'இந்தியா இறந்தால் யார் வாழ முடியும்?' - நேருவின் வார்த்தைகளில் காங்.-க்கு சசி தரூர் பதில்
Updated on
1 min read

கொச்சி: ‘கட்சிகள் எப்போதும் தேச நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியா இறந்தால் யார் வாழமுடியும்? என்ற ஜவஹர்லால் நேருவின் வார்த்தைகளை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்கும் குழுவுக்கு சசிதரூர் தலைமை வகித்தார். இதனால் அவர்மீது காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து கடந்த மாதம், சசிதரூரை மறைமுகமாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, " காங்கிரஸ் கட்சி நாட்டுக்கே முன்னுரிமை கொடுக்கிறது. ஆனால், சிலர் மோடிதான் முதலில், அதன் பின்னர்தான் நாடு என்று உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து கொச்சியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவரின் கேள்விக்கு பதிலளித்த சசி தரூர், “தேசம் ஆபத்தில் இருக்கும்போது உங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அப்போதுதான் நாம் அனைவரும் வாழ முடியும். என் கருத்துப்படி, தேசம் முதலில் வரவேண்டும். கட்சிகள் தேசத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும். நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அந்தக் கட்சியின் நோக்கம் அதன் வழியில் சிறந்த இந்தியாவை உருவாக்குவதாகும்.

சித்தாந்தங்கள் அடிப்படையில் கட்சிகள் வேறுபடலாம் என்றாலும், அவை அனைத்தும் சிறந்த, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும். அரசியல் என்பது போட்டி நிறைந்தது. என்னைப் போன்றவர்கள் எங்கள் கட்சியை மதிக்கிறோம். ஆனால் தேசிய பாதுகாப்பு நலனுக்காக மற்ற கட்சிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் கூறும்போது, சில சமயங்களில் கட்சிகள் இதை விசுவாசமற்றதாக உணர்கின்றன. அது ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது.

நமது ஆயுதப்படைகள் மற்றும் நமது அரசாங்கத்தை ஆதரிப்பதில் நான் எடுத்த நிலைப்பாட்டால் பலர் என்னை மிகவும் விமர்சிக்கின்றனர். ஆனால் இது நாட்டிற்கு சரியான விஷயம் என்று நான் நம்புவதால் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in