இந்தியாவை தாக்கினால் விளைவுகள் உண்டு என்ற வலுவான செய்தி உலகுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமித் ஷா

இந்தியாவை தாக்கினால் விளைவுகள் உண்டு என்ற வலுவான செய்தி உலகுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமித் ஷா
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற வலுவான செய்தியை இந்தியா உலக்கு வழங்கி இருக்கிறது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. அதோடு, 27 கோடி பேர் வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் மிகப் பெரிய விஷயம் எது என்றால், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதே.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடந்தன. மோடி பிரதமரான பிறகு, ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது அதற்கு எதிராக துல்லிய தாக்குல் நடத்தப்பட்டது, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக வான் தாக்குதல் நடத்தப்பட்டது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், விளைவுகள் உண்டு என்ற வலுவான செய்தியை நாம் உலகுக்கு வழங்கி உள்ளோம்.

கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசு 60 கோடி ஏழை மக்களுக்கு கழிப்பறைகள், எரிவாயு, மின்சாரம், இலவச உணவுப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கி இருக்கிறது.

2025ம் ஆண்டு கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச கூட்டுறவு ஆண்டை கொண்டாட ஐநா சபை, இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது. சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு இன்று ராஜஸ்தானில் 24 தானிய சேமிப்பு கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளன. 64 தினை விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பால் உற்பத்தி குழுக்களுக்கு மைக்ரோ ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் கூட்டுறவு அமைச்சகம் 61 புதிய முயற்சிகள் மூலம் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த பாடுபட்டுள்ளது.

ராஜஸ்தான் ஒட்டகங்களின் மாநிலம் என்பதை நாடு அறிந்துள்ளது. ஒட்டக இன பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியையும், கூட்டுறவு சங்கங்களைப் பயன்படுத்தி ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்களை பரிசோதிப்பதையும் நாங்கள் தொடங்கி உள்ளோம். இதனால், வரும் காலத்தில் ஒட்டகங்களின் இருப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது." என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in