

உத்தராகண்டில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் மழை வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 24 பேர் இறந்துவிட்டனர்.
உத்தரப் பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
உத்தராகணட் மாநிலம், டேராடூனில் உள்ள கத்பங்களா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பலத்த மழை பெய்தது. அப்போது அங்கிருந்த மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 3 வீடுகள் மண் மூடி மேடாகிவிட்டது. அதிலிருந்த 7 பேரும் உயிரிழந்தனர். அவர் களின் சடலங்களை ராஜ்பூர் போலீ ஸாரும், மீட்புப் படையினரும் மீட்டனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த னர். இந்த சம்பவம் நிகழ்ந்தபோது அனைவரும் தங்களின் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
உத்தராகண்டில் மழை வெள்ளத் தில் சிக்கி உயிரிழந்த 24 பேரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
உத்தரப் பிரதேச மாநிலம், பலராம்பூர் மாவட்டத்தில் ரப்தி நதியில் வெள்ள நீர் அபாய கட்டத் தைத் தாண்டி ஓடுகிறது. நதியை யொட்டி தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிஹாரில் தர்பாங்கா மாவட்டத்தில் கமலா பாலன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரங்களில் வசித்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோசி, கந்தக், பாக்மதி நதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில், பிரம்மபுத்திரா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், இந்நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் அசாமின் வடக்கு பகுதிகளும், காஸிராங்கா தேசிய வன உயிர் பூங்காவும் வெள்ள நீரால் சூழப்படும் அபாயம் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
2 பேர் பலி
அருணாசலப் பிரதேச மாநிலம் இடாநகரின் சி - செக்டார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 வயது சிறுமியும், 12 வயது சிறுவனும் உயிரிழந்தனர். மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் நபம் துகி உத்தரவிட்டுள்ளார்.
மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ மலை மாவட்டத்தின் புல்பாரி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்த மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி, அலிபர்தூர் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.