லக்னோ நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி
லக்னோ நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ நீதிமன்றம்

Published on

புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டு ராணுவத்துக்கு எதிராகப் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது 2022, டிசம்பர் 16 அன்று, இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே லடாக் எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்துப் பேசினார். "இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது மக்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி கேட்பார்கள். ஆனால், இந்திய படைகளை சீன படை தாக்கியது குறித்து ஒருமுறை கூட கேள்வி கேட்க மாட்டார்கள்" என பேசியதாகக் கூறப்படுகிறது.

சீன ராணுவம், இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ராகுல் காந்தி பேசியது தனக்கு மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டு முன்னாள் எல்லை சாலைகள் அமைப்பின் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவத்சவா வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக லக்னோ நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். ராகுல் காந்தி சார்பில் வழக்கறிஞர் பிரன்ஷு அகர்வால் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரன்ஷு அகர்வால், "ராகுல் காந்தி நேராக நீதிபதியின் அறைக்குச் சென்றார். அங்கு, ஜாமீன் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.20 ஆயிரம் பத்திரம் மற்றும் இரண்டு நபர்களின் உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது" என தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in