

உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் தவே கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது சர்வாதிகாரத்தின் மூலமே நல்லது செய்ய முடியும் என்ற தொனியில் பேசியதை தான் முழுதும் ஏற்பதாக கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.
குஜராத் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற “உலகமயமாதல் காலக்கட்டத்தில் சமகாலப் பிரச்சினைகள் மற்றும் மனித உரிமைகள் சந்திக்கும் சவால்கள்” என்ற தலைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் உரையாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் தவே, “நான் சர்வாதிகாரியாக இருந்திருந்தால் ஒன்றாம் வகுப்பிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பேன். வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதை இவற்றைக் கொண்டுதான் கற்க முடியும்.
இதற்கு யாராவது நான் சமயச் சார்புடையவரா அல்லது மதச்சார்பற்றவரா என்று என்னைப் பற்றிக் கூறினால் நான் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நாம் நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து கற்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
அவரது இந்தக் கூற்றை தான் ஏற்றுக் கொள்வதாகக் கூறிய கோவா முதல்வர் மனோகர் பரிக்கர், "அவர் கூறியது சரியா, தவறா என்பது பற்றிக் கூற விரும்பவில்லை. ஆனால் அவர் கூறியதை நான் ஆராய்ந்து பார்க்கிறேன். பகவத் கீதை நன்மை என்று அவர் உணர்கிறார். ஆனால் நல்ல விஷயங்களை சர்வாதிகாரியாக இல்லாவிட்டால் செய்ய முடியாது என்கிறார்.
இன்றைய காலக்கட்டத்தில் இது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி. நல்லது செய்ய வேண்டுமென்றால் பெரிய போராட்டங்களையும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. தொடர்ந்து போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.
நீதிபதி மகாபாரதம், பகவத் கீதையை வாசிப்பதன் மூலம் மதிப்பீடுகளை உயர்த்திக் கொள்ள முடியும் என்கிறார். ஆனால் மற்றோர் பைபிள், குரான் போன்றவற்றைப் பயன்படுத்தி மதிப்பீடுகளை உயர்த்திக் கொள்ளலாம்.
என்ன கூறினாலும் நீதிபதியின் முதல் வாக்கியம் மிக முக்கியமானது, “நான் சர்வாதிகாரியாக இருந்திருந்தால்” - இதுதான் முக்கியமான விஷயம்” என்று கூறியுள்ளார் கோவா முதல்வர்.