

தெலங்கானாவில் அரசுப் பள்ளியில் குடித்துவிட்டு கேளிக்கையில் ஈடு பட்டிருந்ததாக, 7 ஆசிரியர்கள், ஒரு ஊழியர் என 8 பேர் செவ்வாய்க்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம், தங்கர்வாடி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை, வகுப்பு இடைவேளையின்போது ஆசிரியர்கள் தங்கள் அறையில் ‘பார்ட்டி’ கொண்டாடியுள்ளனர். 7 ஆசிரியர்கள் 1 ஊழியர் என 8 பேர் மது அருந்திவிட்டு, போதையில் ஆட்டம், பாட்டம் என கேளிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர்கள் வகுப்புக்கு வராமல் என்ன செய் கிறார்கள் என மாணவர்கள் சென்று பார்த்து திடுக்கிட்டுள்ளனர்.அவர்கள் இதுகுறித்து தங்கள் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் சிலரும் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்து, கரீம்நகர் போலீஸாருக்கும், மாவட்ட கல்வி அதிகாரிக்கும் புகார் செய்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பெற்றோர்களின் புகாரின் அடிப் படையில் மாவட்ட கல்வி அதிகாரி லிங்கய்யா அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் 8 பேரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்து அவர் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.