பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக கார்ட்டூன் வரைந்த நபர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

ஹேமந்த் மாளவியா | கோப்புப் படம்
ஹேமந்த் மாளவியா | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான ஆட்சேபகரமான கார்ட்டூனை சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாளவியா முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாளவியா-வுக்கு எதிராக வழக்கறிஞரும் ஆர்எஸ்எஸ் பிரமுகருமான வினய் ஜோஷி என்பவர், இந்தூரில் உள்ள லசுடியா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், ஹேமந்த் மாளவியாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

வினய் ஜோஷி தனது புகாரில், “இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், சிபெருமான், பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ அவமதிக்கும் நோக்கிலும் ஏராளமான கார்ட்டூன்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், கருத்துக்களை ஹேமந்த் மாளவியா சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அரசியலமைப்பு பிரிவு 19(1)(a)-ன்படி அவர் கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி உள்ளார். எனவே, அவர் மது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், “ஹேமந்த் மாளவியாவின் படைப்புகள் நல்ல ரசனையிலோ அல்லது நல்ல நோக்கத்திலோ உருவாக்கப்பட்டவை அல்ல என்பது தெளிவாகிறது. மத உணர்வுகளை வேண்டுமென்றே காயப்படுத்தும் தீங்கிழைக்கும் முயற்சி இது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் வரம்பை ஹேமந்த் மாளவியா நிச்சயமாக மீறிவிட்டார்.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. அவரது குற்றம் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக்கூடியது.” என தெரிவித்தது.

ஹேமந்த் மாளவியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விருந்தா குரோவர், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். எனினும், முன்ஜாமினை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இதையடுத்து, ஜாமின் கோரி விருந்தா குரோவர் மூலம், ஹேமந்த் மாளவியா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சுதன்ஷூ துலியா, ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கை வரும் 14-ம் தேதி விசாரிக்க ஒப்புக்கொண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in