இடதுசாரி தீவிரவாத அமைப்புகளை முடக்க மகாராஷ்டிர பேரவையில் மசோதா தாக்கல்

இடதுசாரி தீவிரவாத அமைப்புகளை முடக்க மகாராஷ்டிர பேரவையில் மசோதா தாக்கல்
Updated on
2 min read

மும்பை: இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்க வகை செய்யும் மசோதாவை, அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தாக்கல் செய்தார்.

நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மாவோயிஸ்டுகள் அல்லது நக்ஸலைட்டுகள் என்று அழைக்கப்படும் இடதுசாரி தீவிரவாதிகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரில், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிராவிலும் இடதுசாரி தீவிரவாதிகளின் செயல்பாடுகளை முடக்க முடிவு செய்து அதற்கான மசோதாவை மாநில அரசு இயற்றியுள்ளது. இந்த மசோதாவை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய ஃபட்னாவிஸ், "இந்த மசோதா கடந்த 2024 டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதா குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதை அடுத்து, அதற்காக கூட்டுக் குழு உருவாக்கப்பட்டது. அக்குழு இது குறித்து விரிவாக விவாதம் நடத்தியது. மசோதா விஷயத்தில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த காலங்களில் மகாராஷ்டிராவின் 4 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டன. தற்போது 2 தாலுகாக்களில் மட்டுமே இந்தப் பிரச்சினை உள்ளது. இந்த மசோதாவை கொண்டு வருவதற்குக் காரணம், மாவோயிஸம் என்று அழைக்கப்படும் தீவிரவாத இடதுசாரி அமைப்புகள் செல்வாக்கு மிக்கவை. அரசியலமைப்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக இவர்கள் ஆயுதங்களை ஏந்துகின்றனர்.

லெனின் மற்றும் மார்க்ஸின் அமைப்புமுறையை இங்கே செயல்படுத்த விரும்புகிறார்கள். சிபிஐ (மாவோயிஸ்ட்) ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு. அந்த அமைப்புக்கு என்று சொந்தமாக அரசியலமைப்பு உள்ளது. இவர்கள் அரசியலமைப்புக்கும், நாடாளுமன்றத்துக்கும் எதிரானவர்கள். நகர்ப்புற நக்ஸலிசம் இப்படிப்பட்டதுதான்.

தீவிரவாத இடதுசாரி அமைப்புகளை பல மாநிலங்கள் தடை செய்துள்ளன. ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், தெலங்கானா போன்ற மாநிலங்களில் பல அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 64 அமைப்புகள் உள்ளன. நாட்டிலேயே இதுதான் அதிகம். இருந்தும், இங்கே ஓர் அமைப்பு கூட தடை செய்யப்படவில்லை. அதன் காரணமாக அத்தகைய அமைப்புகள் தங்கள் தலைமை அலுவலகத்தை இங்கே அமைத்திருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறிவிட்டது. அதோடு, மகாராஷ்டிராதான் மையாக உள்ளது. கொங்கண், அமராவதி, பீட் ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டங்களைவிட எங்கள் சட்டம் மிகவும் முற்போக்கானது. ஐஎஸ்ஐ, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளைப் போலவே இவர்களும் தீவிரமயமாக்கலைச் செய்கிறார்கள். கல்வியாளர்கள், அதிகாரிகளை மூளைச்சலவை செய்வதே இவர்களின் செயல்பாடு.

எனவே, இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று சபைக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இது எங்கள் அரசியல் நிலைப்பாடு அல்ல. சில சக்திகள் நாட்டுக்கு எதிராக செயல்பட விரும்பும்போது அதற்கு எதிராக வலுவான சட்டங்களை இயற்ற வேண்டிய தேவை எழுகிறது. இந்த சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு அவசியம்" என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in